ஈஸ்டர் பண்டிகை: தென்காசியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு - Easter day
Published : Mar 31, 2024, 11:59 AM IST
தென்காசி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த சேர்ந்தமரம், கள்ளம்புளி, கோவிலாண்டனூர், திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அருட்தந்தை ஜெகன் ராஜ் தலைமையில் ஈஸ்டர் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவதை நினைவு கூறும் வகையில், நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு, பக்தர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி தேவாலயத்திற்குள் ஜெபத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது. மேலும், ஈஸ்டரை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த ஈஸ்டர் தின சிறப்பு ஆராதனைகளை முன்னிட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஜெபக்கூட்டடத்தில் பங்கேற்றனர். குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களும் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு இயேசுவை ஜெபித்தனர். மேலும், சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு மக்கள் கூட்டம் முடிவில் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு, இனிப்பு வழங்கி அன்பை பகிர்ந்து கொண்டனர்.