கோவையில் களைக்கட்டிய தீபாவளி பர்ச்சேஸ்.. கூட்டநெரிசலை கட்டுப்படுத்த புது ஐடியா அப்ளை!
Published : Oct 28, 2024, 7:41 AM IST
கோயம்புத்தூர்: வருகின்ற வியாழக்கிழமை (அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், விடுமுறை நாளான நேற்று (அக்.27) பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
அந்தவகையில் கோவையில் உள்ள டவுன்ஹால், கிராஸ் கட், பிரகாசம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகளையும், பட்டாசுகளையும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதனை அடுத்து, கோவையில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் சாலையின் இரு புறங்களிலும் பேரிகேட்டுகளை அமைத்து பொதுமக்கள் அதற்குள்ளாகவே வரும்படி ஏற்பாடு செய்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் பாதிக்காத வண்ணம் அமைந்தது. மேலும், வாட்ச் டவர் மூலமாகவும், சிசிடிவி கேமராக்கள் மூலமும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து பேசிய பொதுமக்கள், "கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த முறை சாலைகளில் நடந்து சென்ற நிலையில் இந்த முறை போக்குவரத்து காவல் துறையினர் சாலைகளில் நடந்து செல்ல விடாமல் இரு புறங்களிலும் பேரிகடுகளை அமைத்து அங்கு நடக்க செய்ததால் பாதுகாப்பாக உள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.