போலியோ சொட்டு மருந்து முகாமில் அடம்பிடித்த குழந்தைகள்! அமைதிப்படுத்திய தருமபுரி கலெக்டர் - Dharmapuri Polio Drop Camp
Published : Mar 3, 2024, 11:25 AM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (மார்ச் 3) தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்ட சில குழந்தைகள், சொட்டு மருந்து போட்டுக் கொள்ளாமல் அடம் பிடித்ததையடுத்து, அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் விளையாட்டு பொருட்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கி அமைதிப்படுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதுபோலவே, இன்று நடைபெறும் இந்த முகாமில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்கள், நகராட்சி பகுதியில் 20 முகாம்கள் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்பட்டு உள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 4 ஆயிரத்து 83 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இதற்காக பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.