'ஏ.சி.சண்முகத்தை மத்திய அமைச்சராக டெல்லிக்கு அனுப்புவோம்' - இயக்குனர் சுந்தர்.சி பேச்சு! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 15, 2024, 10:31 AM IST
திருப்பத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து திரைப்பட இயக்குனர் சுந்தர்.சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதனூர், கீழ் முருங்கை, தேவலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய இயக்குனர் சுந்தர்.சி," ஏ.சி.சண்முகம் பதவியில் இல்லாத நிலையிலேயே மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். நீங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்போவது, எம்.பியை அல்ல. மத்திய அமைச்சராக அவரை டெல்லிக்கு அனுப்புவது, நமது கடமை. அதற்காக அனைவரும் ‘தாமரை சின்னத்தில்’ வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, மின்னூர் ஊராட்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நிலையில், பிரச்சாரத்திக்கான கால நேரம் முடிந்ததால் பிரச்சாரம் செய்யாமல், தமாரை சின்னத்திற்ககு வாக்களிக்கும் படி சைகையால் கையசைத்தபடி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சுந்தர்.சியிடம் செல்பி எடுத்துக்கொண்டனர்.