நெல்லை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!
Published : Jan 21, 2024, 5:16 PM IST
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம் டவுன் பகுதியில் அமைந்துள்ளது வைணவஸ் தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற நெல்லை லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில்.
இந்த கோயிலில் இன்று (ஜன. 21) கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி காலை சுதர்சன ஹோமத்துடன் தொடங்கிய இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இன்று (ஜன. 21) காலை யாகசாலை பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து இரண்டு நாட்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. கோயில் ராஜகோபுரம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து மூலவருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து வணங்கி சென்றனர்.