தென்காசியில் நகைக்கடையில் திருட்டு: பெண் வாடிக்கையாளர் கைவரிசை! - Tenkasi
Published : Feb 14, 2024, 11:11 AM IST
|Updated : Feb 15, 2024, 7:05 AM IST
தென்காசி: பாவூர்சத்திரத்தில் நகைக் கடையில் நகைகள் வாங்குவது போல் மோதிரத்தைத் திருடிய பெண் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் கடையம் சாலையில் அடைக்கலப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த லூக்கா ரத்னராஜ் என்பவர் தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் நகை வாங்குவது போல வந்த நடுத்தர வயது பெண் ஒருவர், நேற்று (பிப்.14) கடை ஊழியர்களிடம் நகைகளைக் காண்பிக்கச் சொல்லி அது குறித்த விலை மற்றும் கிராம் விபரங்களைப் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மோதிரம் ஒன்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது கையினுள் மறைத்து வைத்து அதனைத் திருடியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் நகை ஏதும் வாங்காமல் திரும்பிச் சென்றார்.
அதன் பின்னர், கடை உரிமையாளர் பெண்மணியிடம் நகைகள் காண்பித்ததில் ரூ.7,000 மதிப்பிலான தங்க மோதிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை வலைவீசித் தேடிவருகின்றனர்.