திருப்பத்தூரில் பரபரப்பு.. பாஜக கொடிக்கம்பம் மர்மமான முறையில் சேதம்! - BJP flagpole issue
Published : Mar 11, 2024, 2:56 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, கழிவுநீர் கால்வாயில் வீசிச் சென்ற மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பத்தூர், அகரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இதற்காக அப்பகுதியில் பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொடிக்கம்பம் திறப்பு விழா வருகிற 17ஆம் தேதி அன்று நடத்த வழிவகை செய்யப்பட்டிருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, கழிவு நீர் கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் வடக்கு மண்டலத் தலைவர் பழனி தலைமையிலான பாஜகவினர், கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.