பாமக பிரச்சாரத்தில் எண்ட்ரீ கொடுத்த அமைச்சர் துரைமுருகன்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா? - Lok sabha Election 2024
Published : Apr 15, 2024, 5:17 PM IST
வேலூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்தும் நாம் தமிழர் கட்சி சுயேச்சை என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
தேசிய அளவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. இதனிடையே பிரச்சார களத்தில் நடைபெற்ற நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் பாலு பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த வழியாக அமைச்சர் துரைமுருகன் காரில் வந்தார். அவரை பார்த்த பாமக வேட்பாளர் பாலு, “முருகனுடைய அருள் எனக்குக் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசீர்வாதம், அருளை, வெற்றிபெற வேண்டும் என்ற வாழ்த்தை நான் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறேன்.
நிச்சயமாக வெற்றி பெறுவேன். இந்த தொகுதியில் வெற்றி பெற்றதும், உங்களை நேரில் வந்து சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அதற்கு அமைச்சர் துரைமுருகனும் முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால் அப்பகுதியில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.