ஆட்டோ மீது கார் மோதிய கோர சம்பவம்.. ஒருவர் உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Auto Car accident - AUTO CAR ACCIDENT
Published : Jun 2, 2024, 10:52 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சாமுடி வட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா (42). ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் இவர், இன்று திருப்பத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாச்சல் ரயில்வே மேம்பாலம் வழியாக புதுப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அதேநேரம், ஜோலார்பேட்டை அடுத்த அன்னை நகரைச் சேர்ந்த சரவணன் (45) என்பவர் வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு, பாச்சல் மேம்பாலத்திம் மீது வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, நேர் எதிரே எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது.
மேலும், ஓட்டுநர் ராஜா மற்றும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஷியாமளா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தின் கீழே விழுந்தனர். மேலும், சின்ன கவுண்டர் வட்டத்தைச் சேர்ந்த ராணி என்பவர் ஆட்டோவில் இருந்து மேம்பாலத்தின் மீது இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த ராஜா மற்றும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஜோதி, பிரியா, ஷியாமளா ஆகிய நான்கு பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ராஜா மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தின்போது ஏற்பட்ட கூட்டத்தை உடனடியாக, டிஎஸ்பி செந்தில் தலைமையிலான போலீசார் கலைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். பின்னர், இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.