தேனி: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு ஈரோடு பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, தேனி மாவட்டம் உப்புகோட்டையை சேர்ந்த ரவி என்பவர் தனக்கு தெரிந்தவர் என்றும் அவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் அவரின் பொருள் ஒன்றை கனடா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.96 ஆயிரம் கோடி என்றும் அந்தப் பணத்தை இந்தியா ரூபாயாக மாற்ற வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள பல துறைகளுக்கு பணம் செலுத்தினால்தான் இந்திய ரூபாயில் பணத்தை மாற்ற முடியும் என ஜெகதீஷிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குமரவேல் ரவியிடம் அறிமுகப்படுத்தி வைப்பதாக ஜெகதீஷை அழைத்துச் சென்றுள்ளார்.
அதன்படி, தேனி பழைய பேருந்து நிலையத்தில் ரவியின் அலுவலகத்தில் அவரை சந்திக்க குமரவேல், ஜெகதீஷை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரவியின் உறவினர் திருலோகச்சந்தர் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்ததாகவும், தனது மாமா மிகப் பெரிய தொழில் அதிபர் என்றும் ரூ.10 லட்சம் கொடுத்தால் ரூ.100 கோடியாக திரும்பி தருவதாக திருலோகச்சந்தர் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கி சின்னம்
மேலும், ரூ.96 ஆயிரம் கோடி பணத்திற்கான ஆதாரத்தையும், அதில் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையெழுத்துடன் ரிசர்வ் வங்கி அடையாள சின்னம் பொறிக்கப்பட்டிருந்த ஆவணத்தை காட்டியதாகவும், இதனை நம்பி ரவியிடம் ரூ.30 லட்சம் கொடுத்ததாகவும், ஒரு மாதத்தில் உங்கள் வங்கி கணக்கில் ரூ.100 கோடி ரூபாய் செலுத்துவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கு: நாகேந்திரன் கூட்டாளிகள் வீட்டில் சோதனை.. கொலை திட்டம்? சிக்கிய பட்டா கத்திகள்!
இதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ரவியிடம் ரூ.20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், அவருக்கு ரூ.450 கோடி கொடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாகவும், அவருக்கு ரூ.150 கோடி திருப்பி தருவதாக கூறி பணத்தைப் பெற்றுள்ளனர்.
காசோலை மோசடி
இந்நிலையில், ஒரு மாதங்கள் கடந்தும் பணம் கிடைக்காததால், ரவியிடம் இது குறித்து கேட்ட போது, தொடர்ந்து தாங்கள் அலைக்கழித்து வந்ததாகவும், தாங்கள் கொடுத்த பணத்தை யாராவது திருப்பி கொடுங்கள் எனக் கேட்டபோது, காசோலையாக கொடுத்துள்ளனர். ஆனால், அந்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்றபோது பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர்.
இதனையடுத்து ஜெகதீஷ், வேலுச்சாமி மற்றும் நாகராஜ் ஆகிய மூன்று பேரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், ''தங்கள் மூன்று பேரிடம் ரூ.60 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளதாகவும், தங்களைப் போல் நிறைய பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து தங்கள் பணத்தை மீட்டுக் கொடுத்து தங்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ரவி மற்றும் அவரின் உறவினர் திருலோகச்சந்தர், ஈஸ்வரன் மற்றும் குமரவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர்.