தீபாவளி நாளில் சட்டென குறைந்த பூக்கள் விலை.. கும்பகோணம் மலர் சந்தை வியாபாரிகள் கூறும் காரணம்! - FLOWERS PRICE DECREASED
Published : Oct 30, 2024, 1:34 PM IST
தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகைக்கு வழக்கமாக பூக்கள் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இவ்வாண்டு வழக்கத்திற்கு மாறாக தருமபுரி பகுதிகளில் இருந்து கும்பகோணம் மலர் சந்தைக்கு தேவையை விட அதிகமாக செவ்வந்தி பூக்கள் வந்துள்ளதால், வணிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு விலை குறைவாக விற்பனை செய்கின்றனர். இதனால் செவ்வந்தி கிலோ ரூபாய் 60 முதல் 200 வரை ரகத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளியை அடுத்து அமாவாசை, கேதார கௌரி விரதம் மற்றும் கந்தசஷ்டி விழா தொடங்குவதால் செவ்வந்தியைத் தவிர்த்து பிற பூக்களின் விலை, நேற்றை விட சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று கிலோ ரூபாய் 60க்கு விற்பனையான பன்னீர் ரோஜா, இன்று ரூபாய் 200க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஆப்பிள் ரோஜா ரூபாய் 100-ல் இருந்து 200 ஆக விற்பனையாகிறது.
அதேபோன்று, வெளி மாநிலங்களில் இருந்து வரும் டெய்சி பூங்கொத்து விலை 30 ரூபாய்க்கும், ஊட்டி ரோஜா கட்டு ரூபாய் 50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக செவ்வந்தி பூ அதிக அளவில் கும்பகோணம் மலர் சந்தைக்கு வந்துள்ளதால், பிற ஊர்களைக் காட்டிலும் இங்கு விலை குறைவாக விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு மலர் வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விலைக் குறைவால் பொதுமக்கள் மகிழ்வோடு அதிக அளவில் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து மலர் வணிகர் தர்மர் கூறுகையில், “கும்பகோணம் மலர் சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்ததால், செவ்வந்தி பூக்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அதிகமாக பூக்களை வாங்கி செல்கின்றனர். ஆப்பிள் ரோஜா, பன்னீர் ரோஜா ஆகிய பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று கூறினார்.