ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் - Aishwarya Rajinikanth in Palani
Published : Mar 27, 2024, 12:38 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு இன்று (புதன்கிழமை) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், அங்கு பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார். இதன் பின்னர், கோயில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் அவருக்கு 'பழனி தல வரலாறு புத்தகம்' அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து ரோப்கார் வழியாக கீழே இறங்கிய ஐஸ்வர்யாவைக் கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து முருகன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கடந்த வாரம் திருச்செந்தூர் கோயிலில் இவர் தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து இன்று பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.