கூடலூர் பகுதியில் பொதுமக்களை விரட்டிய ஒற்றை காட்டு யானை! - elephant
Published : Sep 1, 2024, 1:16 PM IST
நீலகிரி : நீலகிரி மாவட்டமானது 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், இங்குள்ள குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கூடலூர் அருகே உள்ள கோழிப்பாலம் பகுதியில், தோட்டத்திலிருந்து வெளியேறி காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. அதுமட்டுமின்றி சாலையில் சென்ற மக்களை விரட்டியதால் பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பின்னர், சிறிது நேரம் யானை தானாகவே வனப்பகுதிக்கு சென்று விட்டது.
மேலும், காட்டு யானைகள் நடமாட்டமானது இப்பகுதியில் தற்போது அதிகரித்துள்ளதாகவும், காட்டு யானைகள் வனத்திலிருந்து வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும், மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, வனத்துறையினர் காட்டுப் பகுதியில் முகாமிட்டு யானைகள் வெளியே வராத அளவிற்கு கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.