திருத்தணி அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை துரத்திய நாய்கள்.. வீட்டுக்குள் தஞ்சமடைந்த மான்! - DEER RESCUED IN TIRUVALLUR
Published : Feb 18, 2025, 1:12 PM IST
திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தற்போதே வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. அதனால், காடுகளில் வாழும் யானை, மான் போன்ற உயிரினங்கள் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்குள் தண்ணீர் மற்றும் உணவுக்காக புகுந்து வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கிராமத்திற்கு அருகே புள்ளிமான் ஒன்று வந்துள்ளது.
காப்புக் காட்டில் இருந்து அதிக வெயில் காரணமாக தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை, குடியிருப்புப் பகுதிக்குள் இருந்த தெருநாய்கள் துரத்தியுள்ளன. அதனைக் கண்டு பயந்த, புள்ளிமான் உடனடியாக அருகில் இருந்த ஒரு வீட்டிற்கு பின்புறம் பதுங்கியுள்ளது. மான் வந்ததைக் கண்ட வீட்டின் உரிமையாளர், உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
தெரு நாய்களிடம் இருந்து புள்ளிமானைக் காப்பாற்றியது மட்டுமின்றி, தண்ணீர் கொடுத்து சுமார் 2 மணி நேரமாகப் பாதுகாத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த வனத்துறையினர், புள்ளிமானை பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், காட்டுப் பகுதியில் வாழும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் பகுதியில், தண்ணீர் இருப்பு வைக்கும் பணியை வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.