பைக்கில் வந்தவரை முட்டித் தூக்கிய மாடு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி! - cow knocked a person - COW KNOCKED A PERSON
Published : Sep 2, 2024, 6:34 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை மற்றும் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் அபாய சூழ்நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்ததன் பேரில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெண்டரும் விடப்பட்டது.
இதன்படி, ஒப்பந்ததாரர்கள் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து வருகின்றனர். அதேநேரம், கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை குறையவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை மேட்டுப்பாளையம், சிறுமுகை சங்கர் நகர்ப்பகுதி சாலையில் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டுநரை, அங்கு சுற்றித்திரிந்த மாடு ஒன்று முட்டி தூக்கி எறிந்தது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த சிறுகுழந்தை உட்பட மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.