இருளர் சமூக தம்பதியினர் தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஊழியர்கள் மனு! - இருளர் தம்பதியினர்
Published : Feb 16, 2024, 10:56 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்.சி சேம்பரிலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் - ரேணுகா என்ற இருளர் இன தம்பதியினர் பணிபுரிந்து வந்தனர். இவர்களை சேம்பர் உரிமையாளர் கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
பாதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து, இவர்களிடம் கொத்தடிமை மீட்பு குழு வட்டாட்சியர், கோட்டாட்சியார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் கடந்த ஒரு வாரமாக சேம்பரில் வேலை நடைபெறாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், பொய் புகார் அளித்த இவர்களால் தாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம் என்றும் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாக சேம்பரில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பதாகைகளை கையில் ஏந்தி கோட்டாசியார் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், கோட்டாட்சியரிடம் தங்களது உரிமையாளர் தங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார். கணவன் மனைவி வேலைக்கு வந்து ஒரு மாத காலம் தான் ஆகிறது. எங்களை யாரும் கொடுமைப்படுத்தவில்லை. தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருகிறார் என உரிமையாளருக்கு சாதகமாக மனு கொடுத்தனர்.