உதகையில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்.. ரூ.12 கோடி தேயிலை தேக்கம்! - hit and run law
Published : Jan 20, 2024, 4:54 PM IST
நீலகிரி: மத்திய அரசு கடந்தாண்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. அதன் படி வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டால், போக்குவரத்து காவல்துறையிடமோ அல்லது நீதிபதியிடமோ தெரிவிக்காமல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை,குன்னூர்,கோத்தகிரி,கூடலூர் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் தேயிலை பாரம் ஏற்றிச் செல்லும் பணியில் 200க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. இவை டெல்லி, மும்பை, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பிறபகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய வாகனச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தால் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், 7 லட்சம் அபராதம் மற்றும் பத்து ஆண்டு சிறை தண்டனை என்பதை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சுமார் இரண்டு லட்ச கிலோ தேயிலை தூள்கள் குடாேன்களில் தேங்கியுள்ளன. இதன் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாயாகும், வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் தேயிலை தொழில் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.