ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் நேற்று (செப்டம்பர் 9)‘இட்ஸ் குளோடைம்’ (It's Glowtime) எனும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. இதனுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஆகிய கேட்ஜெட்டுகளையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது, ஐபோன் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கும் பயனர்கள் அல்லது ஐபோன் 14 மாடல்களுக்கு பிந்தைய ஐபோன் வைத்திருக்கும் நபர்களுக்கு புதிய ஐபோன் 16 வாங்கலாமா? வேண்டாமா? என மனதில் கேள்வி எழலாம். இதற்காகவே தொகுக்கப்பட்ட ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள் என்ன என்பதை கீழ்வருமாறு காணலாம்.
- ஐபோன் 16 அடிப்படை மாடல் டிஸ்ப்ளே 6.1 இன்ச் ஆகவும் ஐபோன் 16 பிளஸ் மாடல் டிஸ்ப்ளே 6.7 இன்ச் ஆகவும் உள்ளன. இவை 2000 நிட்ஸ் பிரைட்னஸ் திறனுள்ள 120 ஹெர்ட்ஸ் OLED டிஸ்ப்ளே ஆகும்.
- ஐபோன் 16 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களை தவிர்த்து, ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் புதிய பின்பக்க கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
- கூடுதலாக பல பட்டன்களை பக்கவாட்டில் இம்முறை ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஐபோன் 16 சீரிஸ் பதிப்பில் நிறுவியுள்ளது. அதன்படி, கேமரா பட்டன் பல அம்சங்களுடன் மெருகேற்றப்பட்டுள்ளது.
- ஐபோன் 16 மாடலில் உள்ள ஆக்ஷன் பட்டனை வைத்து நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்து, பல ஆப்ஸ்களை நிர்வகிக்க முடியும்.
- இந்தியாவில் ஐபோன் 16 தொடக்க விலை ரூ.79,900 ஆகவும், ஐபோன் 16 பிளஸ் விலை ரூ.89,900 ஆகவும், ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900 முதலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900 விலையிலும் விற்பனைக்கு வருகிறது.
- புதிதாக மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மாடல்களில் இணைத்துள்ளது. இதற்கு ‘ஆப்பிள் இண்டெலிஜன்ஸ்’ (Apple Intelligence) என்று நிறுவனம் பெயரிட்டுள்ளது. படிப்படியாக புதிய அப்டேட்டுகள் வாயிலாக பயனர்களுக்கு இந்த சேவை வழங்கப்படும் என்று ஆப்பிள் தனது வெளியீட்டு நிகழ்வில் அறிவித்தது.
- ஐபோன் 16 மாடல்களில் ஏ18 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக இயந்திர கற்றல் வழிமுறைக்கு (Machine Learning) ஒத்திசைத்து செயல்படுகிறது. இதன் காரணமாக செயற்கை நுண்ணறிவு கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளை ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்னும் எளிமையாக்குகிறது.
- ஐபோன் 16 அடிப்படை மாடல்களில் புதிதாக 48 மெகாபிக்சல் ஃபியூஷன் கேமரா இணைக்கப்பட்டுள்ளது.
- ஐஓஎஸ் 18 புதிய பதிப்பில் மேம்படுத்தப்பட்ட சேட்டிலைட் மெசேஜிங் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- புதிய இயங்குதளத்தில் சாட்ஜிபிடி (ChatGPT) ஒருங்கிணைப்பு இருக்கும் என ஆப்பிள் உறுதி அளித்துள்ளது.