தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

கவாச் தொழில்நுட்பம்: சிறப்புகள் என்ன? கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தடுத்திருக்க முடியுமா?

கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் 'கவாச்' (Kavach) தொழில்நுட்பம் செயல்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை ரயில்வே துறை விசாரித்து வரும் நிலையில், கவாச் தொழில்நுட்பம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

By ETV Bharat Tech Team

Published : 4 hours ago

what is kavach train protection system by indian railways explained news thumbnail
கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தொடர்ந்து, கவாச் தொழில்நுட்பம் குறித்தான கேள்விகள் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளன. (Etv Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டில் நேற்றிரவு (அக்டோபர் 11), திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை (Kavaraipettai) அருகே, சாதாரண விரைவுப் பாதையில் சிக்னல் கிடைத்தும், லூப் பாதையில் சென்று நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதி தடம்புரண்டது. இதனையடுத்து, ஏன் 'கவாச்' (Kavach) பாதுகாப்பு தொழில்நுட்பம் செயல்படவில்லை என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்த விபத்து நடந்த சூழலை உறுதிசெய்துள்ள தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங், சிக்னல் கிடைத்தும் மாற்றுப் பாதையில் சென்றதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இத்தகைய பேரிடர்களைத் தடுப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. அத்தகைய ஒரு முக்கிய தொழில்நுட்பம் தான் 'கவாச்' எனும் இந்தியாவின் தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பு. இந்த சூழலில், ரயில்களின் பாதுகாப்பு அரணாக இருக்கும் 'கவாச்' தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

'கவாச்' என்றால் என்ன?

"கவசம்" என்ற பொருள்படும் கவாச், சிக்னல் ஒழுங்கின்மைகள் அல்லது மோதல் நிலையை கண்டறிந்து தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக ரயில் விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ரயிலின் வேக வரம்புகளைக் கண்காணித்து, அவை சிக்னல்களுக்கு சரியாக பதிலளிக்கிறதா என்பதை உறுதி செய்கிறது. லோகோ பைலட் அதைச் செய்யத் தவறினால், 'கவாச்' கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு, மனிதப் பிழைகள் அல்லது சிக்னல் தோல்விகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கிறது.

'கவாச்' கருவிகள்:

  • லோகோ கவாச்: இது ரயில் என்ஜினில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கணினி அமைப்பு.
  • ஸ்டேஷன் கவாச்: இது ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டிருக்கும் கணினி அமைப்பு.
  • ரேடியோ அதிர்வெண் அடையாளங்காட்டிகள் (RFID டேக்குகள்): இவை தண்டவாளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பொருத்தப்பட்டிருக்கும்.
  • ஜிபிஎஸ் (GPS): ரயிலின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய பயன்படுகிறது.

கவரைப்பேட்டை விபத்தை 'கவாச்' தடுத்திருக்க முடியுமா?

விபத்துக்கான சரியான காரணம் தெரியாமல் உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும், கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படும் விபத்துகளை கவாச் தடுக்க வல்லதாகும்.

சிக்னலை மீறிச் செல்லுதல் (SPAD): ரயில் சிவப்பு சிக்னலைக் கடந்து சென்றால் கவாச் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும்.

அதிக வேகம்: ரயில்கள் குறிப்பிட்ட வேக வரம்புகளுக்குள் இருப்பதை உறுதிசெய்கிறது. அதிக வேகத்தால் ரயில்கள் தடம்புரளும் என்பதால், அதை இந்த தொழில்நுட்பம் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

நேருக்கு நேர் மோதல்கள்: ஒரே தடத்தில் இரண்டு ரயில்கள் கண்டறியப்பட்டால், அவசர கால நடவடிக்கையாக ரயில்களை இடைநிறுத்த செய்ய 'கவாச்' தொழில்நுட்பத்தால் முடியும்.

'கவாச்' தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலை:

ஏப்ரல் 2022 நிலவரப்படி, தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் 1,445 கி.மீ தொலைவு மற்றும் 134 நிலையங்களில் கவாச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மொத்த இந்தியாவின் 68,000 கி.மீ ரயில் பாதையில் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்றாலும், மேலும் 1,200 கி.மீ தூரத்திற்கு இந்த பாதுகாப்பு அம்சம் நிறுவப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க
  1. இயற்பியலுக்கான நோபல் பரிசு: இயந்திர கற்றலில் சாதனை! அவர்கள் செய்தது என்ன?
  2. கூகுள் ஏஐ பாதுகாப்பு: போன் திருடர்களே; நீங்கள் திருந்தி வாழ நேரம் வந்துவிட்டது!
  3. பேருதான் ஐபோன்! உள்ள இருக்கறது எல்லாம் ஆண்ட்ராய்டு ஸ்பேர் பார்ட்ஸ் தான்!

சவால்கள் மற்றும் எதிர்காலம்:

கவாச் கருவிகளைப் பொருத்தி, அந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது கிமீக்கு ரூ.50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறைவான இடங்களில் மட்டுமே இதுவரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், சமீபத்திய விபத்து, இந்திய ரயில்வே முழுவதும் கவாச்சை விரைவாக செயல்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ரயில்வே அமைச்சகத்தின் திட்டங்கள்:

அடுத்த 5 வருடங்களில் 44,000 கி.மீ தூரத்திற்கு 'கவாச்' தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்திய ரயில்வேத் துறை இலக்கு வைத்துள்ளது. டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா போன்ற முக்கிய பாதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மிஷன் ரஃப்தார்" திட்டத்தின் கீழ் இந்த விரிவாக்கம் நடைபெறும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இது இந்திய ரயில்களின் வேகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்குஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி'பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ABOUT THE AUTHOR

...view details