ஐதராபாத் : அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மூலம் கோபிசந்த் தொடகூரா விரைவில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான கோபிசந்த் தொடகூரா, முதன்முதலாக விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்தியர் என்ற சிறப்பை பெற உள்ளார்.
இதற்கு முன் இந்திய ராணுவ வீரர் ராகேஷ் ஷர்மா, கடந்த 1984ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். மேலும் விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். அதன் பின் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜாசாரி, ஷிரிஷா பந்த்லா ஆகியோர் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தாலும் அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆவர்.
அதேநேரம் தற்போது விண்வெளி சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள கோபிசந்த் தொடகூரா அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வருகிறார். அதனால் விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற சிறப்பை கோபிசந்த் தொடகூரா பெற உள்ளார்.