சென்னை:ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து எஸ்.எஸ்.எல்.வி டி-3 (SSLV D3) ராக்கெட் இன்று (ஆக.16) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை குறைந்த செலவிலும், குறைந்த எடை கொண்ட மினி, மைக்ரோ, நானோ வகை செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவின் சார்பில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டை பொறுத்தவரை 34 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும், 120 டன் எடையும் கொண்டது. சுமார் 10 முதல் 500 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களைப் புவியில் இருந்து 500 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ள புவியின் தாழ்வட்ட பாதைக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று இ.ஒ.எஸ் - 08 என்கிற 175.5 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் மற்றும் எஸ்.ஆர் 0 டெமோசாட் என பெயரிடப்பட்டுள்ள ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்கிற தனியார் நிறுவனத்தின் ஒரு செயற்கைக் கோள்களையும் 475 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளது.
செயற்கைக்கோளின் பணிகள்: இ.ஒ.எஸ் செயற்கைக் கோளை பொருத்தவரை புவி கண்காணிப்பு பணி செயற்கைக் கோளாக உள்ளது. இதன்பணி, பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது, காலநிலை கண்காணிப்பு, காட்டுத் தீ கண்காணிப்பு, எரிமலை வெடிப்பு கண்காணிப்பு மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை கண்காணிப்பது போன்ற பணிகளையும், கடலில் வீசும் காற்றின் வேகம் மற்றும் மண்ணில் ஈரப்பதம் ஆகியவற்றையும், இமாலய மலைத் தொடர்களில் பெய்யும் பனிப் பொழிவு அளவு ஆகிய தரவுகளையும் தரவல்லது.