தமிழ்நாடு

tamil nadu

காதல் வந்தாலே மூளையில் மின்னல் தான்! எந்த அன்புக்கு எப்படி செயல்படும் மூளை? - Love Expression In Human Brain

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 6:56 PM IST

Love Lights Of The Human Brain: பின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செயல்பாட்டு காந்த அதிர்வு படங்கள் (FMRI) என்ற முறையை பயன்படுத்தி, மனித மூளையின் ஆறு விதமான காதல் வெளிப்பாட்டை கண்டறிந்துள்ளனர்.

Love Lights Of The Human Brain
Love Lights Of The Human Brain (Credits - Aalto University)

லண்டன்: காதல் என்ற சொல்லை சூழ்நிலைக்கு ஏற்ப பல இடங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நம் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே, காதல் மற்றும் மூளை பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், காதல் பற்றிய ஆராய்ச்சியை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும் விதமாக, பின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் குழு ஒன்று பல்வேறு வகையான காதல் செயல்பாடுகள் சூழ்நிலையைப் பொறுத்து மூளையின் வெவ்வேறு பகுதிகளால் தூண்டப்படுகின்றன சமிக்கைகளை ஆராய்ந்து அவை என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெற்றோர்களின் அன்பு முதல் இயற்கையின் அன்பு வரை மனிதர்கள் பல சூழல்களில் காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதுபோன்ற சூழலில், மனிதர்கள் ஏன் காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்பதை மூளையின் ஒரு விரிவான படம் மூலம் இந்த ஆய்வு எடுத்துறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின் போது மூளையை ஆய்வு செய்ய, செயல்பாட்டு காந்த அதிர்வு படங்கள் (Functional Magnetic Resonance Imaging) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆறு வகையான காதல் பற்றிய சுருக்கமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் இணை ஆசிரியர் தத்துவஞானி மற்றும் ஆராய்ச்சியாளரான பார்ட்லி ரின்னே, சமூக சூழலின் காதல் இயக்கவியலை ஆய்வு செய்துள்ளார். அதன்படி இன்ஃபிரியர் கேங்க்லியா (inferior ganglia), நெற்றியின் நடுப்பகுதி (midline of the forehead), ப்ரீக்யூனியஸ் (precuneus) மற்றும் தலையின் பின்புற பக்கங்களில் உள்ள டெம்போரோபரேட்டல் சந்திப்பு (temporoparietal junction) ஆகிய பகுதிகளில் சமூக சூழ்நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடானது உருவாக்கப்படுவதை அவர் கண்டறிந்துள்ளார்.

பெற்றோரின் அன்பில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெற்றோரின் அன்பை கற்பனை செய்யும் போது மூளையின் வெகுமதி அமைப்பான ஸ்ட்ரைட்டம் (striatum) எனப்படும் பகுதியில், மிகுந்த ஆழமான செயல்பாட்டுத்திறன் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், வேறு எந்த வகையான காதல் உணர்வுகளிலும் இது இருந்ததில்லை என்றும் பெற்றோரின் அன்புக்கு இந்த உலகில் எதுவும் நிகரில்லை என்றும் ஆராய்ச்சியாளரான பார்ட்லி ரின்னே குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டும் அல்லாது, காதல் உறவுகள், நண்பர்கள், அந்நியர்கள், செல்லப்பிராணிகள் மற்றும் இயற்கையின் மீதான அன்பு ஆகியவையும் இந்த ஆய்வின் ஒரு பகுதியாகும். ஒரு நபர் அன்பு செலுத்தக்கூடியது மனிதனா, மற்றொரு இனமா அல்லது இயற்கையா என்பதிலும் மூளையின் செயல்பாடு வேறுபடுகிறது என்று இந்த ஆராய்ச்சி காட்டுகிறது. இது ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின், செரிப்ரல் கார்டெக்ஸ் ஜர்னல் (Cerebral Cortex Journal) என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆச்சரியப்படும் விதமாக, நெருக்கமான உறவுகளின் மீது உள்ள அன்பைக் காட்டிலும் அந்நியர்கள் மீது இறக்கம் காட்டும் அன்பு மனித மூளையில் குறைவாகவே காணப்படுகிறது என்றும் இயற்கையின் அன்பு மூளையின் வெகுமதி அமைப்பு மற்றும் காட்சி பகுதிகளை உத்வேகப்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், அன்புடன் தொடர்புடைய மூளைப் பகுதிகள் அனைத்து மக்களிடையேயும் மிகவும் ஒத்தவையாக காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பெரிய ஆச்சரியமடைந்து தெரிவித்துள்ளனர். இதனை தவிர்த்து பரஸ்பர அன்பு, செல்லப்பிராணிகள் மற்றும் இயற்கையின் மீதான அன்புக்கு மாறாக, சமூக அறிவாற்றலுடன் தொடர்புடைய அனைத்து வகையான மூளை பகுதிகளும் வேறுபட்டு செயல்படுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:விண்வெளியில் குளிக்கணுமா? 300 நாட்களை எப்படி சமாளிப்பார் சுனிதா வில்லியம்ஸ்?

ABOUT THE AUTHOR

...view details