சென்னை: மொபைல் எண்களுக்கு பரவலாக வரும் போலி மோசடி அழைப்புகளை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க புதிய 'சஞ்சார் சாதி' எனும் செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம் செய்துள்ளது.
சஞ்சார் சாத்தி மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தும், 'தேசிய அலைவரிசை மிஷன் 2.0' திட்டத்திற்கான கையேட்டையும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் செல்போன் டவரில் இருந்து அலைவரிசையை பகிர்ந்துக் கொள்வதற்கான ஒப்பந்த முறையையும் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் எழும்பூரில் உள்ள தொலைத்தொடர்பு சிறப்பு தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சியாம் சுந்தர் சந்தக், எம்.சந்திரசேகர், ஸ்ரீகாந்த் வேதபள்ளி ஆகியோர் இது தொடர்பான நிகழ்வில் பங்கேற்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணை இயக்குநர் சந்திரசேகர், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கத்துடன் ‘சஞ்சார் சாதி’ செயலி (Sanchar Saathi Mobile App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவுசெய்வதன் வாயிலாக, அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த செல்போன் எண்ணைத் தடைசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.
திருட்டு மொபைலா?
மேலும், அதேபோல் நமது பெயர் மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி வேறு யாராவது செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்தால், அதையும் இந்த செயலி மூலமாக கண்டறிந்து அவற்றை துண்டித்துவிடலாம். ஒரு ஆதார் எண்ணில் எத்தனை செல்போன் எண் வாங்கி இருந்தாலும், தற்பொழுது செயலில் உள்ள எண்ணை தவிர பிற எண்களின் செயல்பாட்டை துண்டித்து விட முடியும் என்று தெரிவித்தார்.
சொல்போன்கள் தொலையும் பட்சத்தில் அதன் ஐஎம்இஐ (IMEI) எண்ணை இந்த செயலியில் பதிவு செய்தால், அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அதை யாரேனும் பயன்படுத்த முயன்றால் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து செல்போனை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முக்கியமாக இந்த செயலியின் உதவியுடன் புதிதாக செல்போன் வாங்கும்போது அது புதிய தயாரிப்பா? அல்லது திருடப்பட்டதா? என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
புகார்கள் மீது நடவடிக்கை:
அலுவலர்கள் பகிர்ந்த தகவலின்படி, சஞ்சார் சாதி இணையதளத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 1,44 லட்சம் மாெபைல் எண்கள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செல்போன் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 17,203 செல்போன்கள் திரும்பி அளிக்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 50 ஆயிரம் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளது.
செல்போன் கோபுரங்கள்:
தமிழ்நாட்டில் 223 கிராமங்கள் உள்பட நாடு முழுவதும் தொலைத்தொடர்பு இல்லாத 27 ஆயிரம் கிராமங்களிலும் டிஜிட்டல் பாரத் நிதி மூலம் பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 197 இடங்களில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. எட்டு இடங்கள் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.
சென்னையில் எழும்பூரில் உள்ள தொலைத்தொடர்பு சிறப்பு துணை இயக்குநர் சந்திரசேகர் பேட்டி (ETV Bharat Tamil Nadu) இந்தியாவில் உருவாக்கப்பட்ட செல்போன் கோபுரங்கள் மத்திய அரசின் நிதியுதவி உடன் நிறுவி வருவதாகத் தெரிவித்த சந்திரசேகர், அந்த இடங்களில் பி.எஸ்.என்.எல் சந்தாதார்களுடன் பிற செல்போன் ஆப்பரேட்டர்களின் சிக்னல்களும் கிடைப்பதற்கான ரோமிங் வசதிகளை ஏற்படுத்த 'இன்ட்ரா சர்கில் ரோமிங்' (Intra Circle Roaming) திட்டமும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், "இதனால் ஏர்டெல், ஜியோ போன்ற பிற நிறுவனங்களுக்கும் நெட்வொர்க் நன்றாக கிடைக்கும். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் தொலைத்தொடர்பு கிடைப்பதில் உள்ள சிக்கல் தீர்க்கப்படும்.
ஃபைபர் ஆப்டிகல்:
தேசிய இணையவழி சேவை 1.0 வெற்றியை தொடர்ந்து, அடுத்தகட்டமாக தேசிய இணையவழி சேவை 2.0 தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் 2.7 லட்சம் கிராமங்களுக்கு இணையவழி சேவை வழங்கப்படவுள்ளது. இதில் 90 விழுக்காடு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி, பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்றவைகளுக்கு வழங்கப்படும்.
குறிப்பாக ஆப்டிகல் பைபர் இணைப்புகளை தேசிய வலைதளத்தில் மேப்பிங் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கனவே ஆப்டிகல் பைபர் போடப்பட்ட பகுதிகளில் புதிதாக வேறு ஆப்பரேட்டர்கள் யாரும் தனியாக பைபர் ஆப்டிகல் கேபிள்களை போடவேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே இருக்கும் ஆப்டிகல் கேபிள்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். ஆப்டிக்கல் பைபர் கேபிள் புதைப்பதற்கு அனுமதி பெறுவதற்கான காலக்கெடுவை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. சாலையில் கேபிள் புதைப்பதற்கு மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும்.
சூரிய மின்சக்தி டவர்கள்:
இதற்கு விண்ணப்பம் செய்தப் பின்னர் சுமார் 499 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. செல்போன் கோபுரங்களுக்கு (டவர்கள்) சூரிய மின்சக்தியை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை சென்றடையும்.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் போது செல்போன் டவரில் கூடுதலாக அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனையும் மீறி செல்போன் அலைவரிசை கிடைக்காமல் போகிறது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடம் குறித்து முன்கூட்டியே தெரிந்தால் கூடுதலாக நடமாடும் டவர்களை வைக்கவும் அறிவுறுத்துகிறோம். மலைப் பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதில் வனத்துறையின் அனுமதியை பெற வேண்டியது உள்ளது.
அனுமதி கிடைக்கும் பகுதியில் செல்போன் கோபுரங்களை அமைத்து வருகிறோம். செல்போன் சிக்னல் கிடைப்பது குறித்து ஆய்வு செய்து, குறைவாக இருந்தால் அந்த நிறுவனத்திடம் கூறி அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம். செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் சிக்னல்களால் பறவைகள், மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது குறித்து எந்த விதமான ஆராய்ச்சியும் உறுதிச்செய்யப்படவில்லை," எனத் தெரிவித்தார்.