ஐதராபாத் : எக்ஸ் தளத்தை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது முதலே அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க். இந்நிலையில், புதிதாக எக்ஸ் தளத்தில் இணையும் பயனர்களுக்கு செக் வைக்கும் வகையில் புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டு உள்ளார்.
அதன்படி எக்ஸ் தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் ஆண்டு சந்தா செலுத்த வேண்டும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். எக்ஸ் தளத்தில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக தடுக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளதாக எலான் மஸ்க் கூறி உள்ளார்.
இது தொடர்பாக பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், புதிய பயனர்களுக்கு கட்டணம் விதிப்பது மூலமாக மட்டுமே போலி கணக்குகள் மற்றும் போட்களை கண்டறிந்து தடுக்க முடியும் என தெரிவித்து உள்ளார். மேலும், தற்போதைய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டூல்ஸ்கள் போலி கணக்குகள் மற்றும் போட்களை எளிதாக கண்டறியும் என்று கூறினார்.
அதன் காரணமாக எதிர்பாராத விதமாக புதிதாக இணையும் பயனர்களிடம் போஸ்ட் பதிவிட மற்றும் மற்றவர்களுடன் உரையாட கட்டணம் வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். புதிதாக இணையும் பயனர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் என்றும், அதேநேரம் மூன்று மாதங்களுக்கு பின்னர் அதே பயனர் போஸ்ட் பதிவிட, மற்றவர்களுடன் உரையாட கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார்.
மற்றபடி இந்த மூன்று மாத காலத்தில் பயனர் எக்ஸ் தளத்தில் மற்றவர்களை பின் தொடரலாம், அவர்கள் போடும் பதிவுகளை படிக்கலாம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் எக்ஸ் தளத்தில் சேர விரும்பும் எவரும் வருடாந்திர சந்தா கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
கட்டணம் செலுத்தாமல் போஸ்ட் செய்ய வேண்டும் என்றால் இவர்கள் 3 மாதம் காத்திருக்க வேண்டும், அதன் பின்னர் கட்டணம் செலுத்தாமல் போஸ்ட் பதிவிட முடியும் என பதிவிட்டு உள்ளார். அதேநேரம் இந்த திட்டம் குறித்தான மற்ற விவரங்கள், எப்போது இந்த திட்டம் கொண்டு வரப்படும், எவ்வளவு தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்த எந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிடவில்லை.
இதையும் படிங்க :சல்மான் கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது - மும்பை குற்றப்பிரிவு போலீசார்! - Salman Khan House Gun Shot