10ஆயிரம் அடிக்கு மேல் வைஃபை; விமான இணைய சேவைக்கு புதிய விதிகள்! - NEW WIFI RULES FOR FLIGHT
இந்திய அரசு விமானங்களில் வைஃபை (Wi-Fi) பயன்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அண்மையில் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானம் 3,000 மீட்டர் உயரத்தை எட்டிய பிறகே, வைஃபை சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
இந்திய வான்வெளியில் பறக்கும் விமானத்தின் பிரதிநிதித்துவ படம் (ANI)
விமானப் பயணத்தில் வைஃபை (Wi-Fi) பயன்படுத்தும் விதிமுறைகளை மாற்றியமைத்து, பயணிகள் 3,000 மீட்டர் அல்லது 10,000 அடி உயரத்தை எட்டிய பின்னரே, வைஃபை சேவைகளைப் பயன்படுத்த முடியும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.
இது ‘விமான மற்றும் கடல் இணைப்பு விதிகள் 2024’ (Flight and Maritime Connectivity Rules, 2024) என்பதை பின்பற்றி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் விமானப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடனும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இன்டர்நெட்
இந்திய விமானப் பரப்பில், வைஃபை சேவைகள் அனுமதிக்கப்படுவதற்கு விமானம் குறைந்தது 3,000 மீட்டர் உயரத்தை அடைந்திருக்க வேண்டும். இந்தக் கொள்கை முதன்முதலில் 2018ஆம் ஆண்டில் அறிமுகமானது. மேலும், இப்போது 2024 செய்யப்பட்டுள்ள புதிய திருத்தத்தின் வாயிலாக, இந்த வரம்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதியின் காரணமாக, நில அமைப்பில் உள்ள நெட்வொர்க்குகளைத் தொந்தரவு செய்யாமல், பயணிகளுக்கான சிக்கலற்ற இணைய இணைப்பு வழங்கப்படுகிறது.
சர்வதேச தரங்களுடன் இணங்கும் இந்திய விதிகள்
இந்த புதிய விதிமுறைகள் சர்வதேச விமானப் பயண வைஃபை சேவை தரங்களுக்கு இணங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் விமானம் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை எட்டிய பிறகே பயணிகள் வைஃபை சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இதேபோல இந்திய விமானப் பயணிகளும் 3,000 மீட்டர் உயரத்தில் வைஃபை சேவையை பெறுவார்கள். இதனால் உலகளாவிய தரத்தினைத் தழுவி இந்திய விமானப் பயணத்தில் இணைய இணைப்பை பயணிகளுக்கு வழங்கமுடியும்.
பாதுகாப்புக்கும், சிறந்த நெட்வொர்க்கிற்கும் உறுதுணையாய் இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகள், விமானப் பயணங்களின் போது பயணிகள் எதிர்பார்க்கும் இணைய இணைப்பினை உறுதிசெய்கின்றது. பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிச் செயல்படுத்தப்பட்டுள்ளதால், விமானங்களின் தடை இல்லாமல் பயணிகள் வைஃபை பயன்பாட்டை அனுபவிக்க முடியும்.
புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தி இணைய சேவைகளை செயற்கைக்கோள் வழியாக வழங்கும் எலான் மஸ்க் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் திட்டத்தை சோதனை முயற்சியாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் இணைத்துள்ளது. இதன் வாயிலாக விமானப் பயணிகளுக்கு வேகமான இணைய சேவையை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்ட எமிரேட்ஸ் நிறுவனம், விமான சேவையின் அடுத்தகட்ட நகர்வுக்கு வித்திட்டுள்ளது.