முன்னணி டெக் நிறுவனமான சாம்சங், புதிய சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் (Samsung Galaxy S24 FE) மொபைலை அறிமுகம் செய்தது. எப்போதும், தங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத பயனர்களுக்காக சற்று குறைந்த விலையில் ஃபேன்ஸ் எடிஷன் மொபைல்களை சாம்சங் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்தவகையில், தற்போது வெளியான சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் மொபைலில் 4,700 mAh பேட்டரி, எக்சினாஸ் 2400இ சிப்செட் (Exynos 2400e Soc), 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, கேலக்சி ஏஐ (Galaxy AI) போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் தேதி, விலை போன்ற கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்சி எஸ்24 Vs எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன்:
பிரீமியம் கேலக்சி மொபைல்களில் கிடைக்கும் பெரும்பாலான அம்சங்கள் அனைத்தும் இந்த போனில் பயனர்களுக்குக் கிடைக்கும். அதன்படி, இரண்டிற்குமான வித்தியாசங்களை பயனர்கள் அறிந்து கொள்வது அவசியம்.
- நீலம், கிராஃபைட், மின்ட்ஆகிய மூன்று நிறங்களில் மட்டுமே எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
- 6.1-அங்குல திரை (inch display) அளவிற்கு மாற்றாக புதிய ஃபேன்ஸ் எடிஷனில் 6.7-அங்குல திரை கொடுக்கப்பட்டுள்ளது.
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 திரை பாதுகாப்பிற்கு பதிலாக விக்டஸ் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது.
- முதன்மை கேமராவில் வரும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸுக்குப் பதிலாக 8 மெகாபிக்சல் உள்ளது.
- சாம்சங் எக்சினாஸ் 2400 சிப்செட்டுக்கு பதிலாக 2400இ இணைக்கப்பட்டுள்ளது.
- 4,000 mAh பேட்டரிக்கு பதிலாக 4,700 mAh திறன்கொண்ட பேட்டரி சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷனில் உள்ளது.
சாம்சங் கேலக்சி எஸ்24 பேன்ஸ் எடிஷன் விலை:
இந்த போனை சாம்சங் நிறுவனம் அக்டோபர் 3 முதல் விற்பனைக்குக் கொண்டுவருகிறது. தற்போது முதல் இந்த 5ஜி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்துகொள்ளலாம். முக்கியமாக, 128 ஜிபி வகை விலையிலேயே, 256 ஜிபி வகையை வாங்கலாம் என நிறுவனம் அறிமுக சலுகையை அறிவித்துள்ளது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. முன்பதிவின் கடைசி பக்கததில் இந்த சலுகையை உங்களுக்காக வைத்துள்ளது சாம்சங்.
முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.4,799 மதிப்பிலான Samsung Care+ ரூ.999 என்ற விலையில் கிடைக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் தளம், அருகில் உள்ள கடைகள் மற்றும் பிற ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து சாம்சங் கேலக்சி எஸ்24 பேன்ஸ் எடிஷன் வாங்கலாம். கட்டணமில்லா மாதத் தவணை வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.