ஹைதராபாத்: மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் (Thar ROXX) காரை தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வந்த மூன்று டோர் கொண்ட காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக, இந்த ஐந்து டோர் கொண்ட தார் ராக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்திராவின் 5 டோர் கொண்ட தார் ராக்ஸ் மாடலுக்கும் 3 டோர் கொண்ட தார் எஸ்யூவி மாடலுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன என்பதை இங்கு காணலாம்.
என்ஜின்: தார் மாடலில், 118hp பவர் 300NM டார்க் வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்சுடன் 2 வீல் டிரைவ் அமைப்பை கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின்; 130hp பவர் 300NM டார்க் வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சுடன்கூடிய 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் செயல்பாடுடைய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 150hp பவர் 320NM டார்க் வெளிப்படுத்தும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பை உடைய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என மொத்தம் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
தார் ராக்ஸ் மாடலில் 152hp பவர் 330NM டார்க் மற்றும் 175hp பவர் 370NM டார்க் வழங்கும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் செயல்பாடுடைய 2.2 லிட்டர் டீசல் என்ஜின்; கூடுதலாக 162hp பவர் 330NM டார்க் மற்றும் 177hp பவர் 380NM டார்க் வழங்கும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 2 வீல் டிரைவ் அமைப்பை கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என மொத்தம் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
காரின் அளவுகள்: தார் மாடல் மாடல் 3,985 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம், 1855 மிமீ உயரம் மற்றும் 2450 மிமீ வீல் பேஸ் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தார் ராக்ஸ் மாடல் அதற்கு நேர்மாறாக 4,428 மிமீ நீளம், 1870 மிமீ அகலம், 1923 மிமீ உயரம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக 2850 மிமீ வீல் பேஸ் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கூடுதலான வீல் பேஸ் கொண்டு அதிகப்படியான இட வசதியை தார் ராக்ஸ் மாடல் வழங்குகின்றது. மேலும், மூன்று டோர்கொண்ட மாடலான தாரில் பயன்படுத்த முடியாத பூட்ஸ்பேஸ் இருந்த நிலையில் தற்பொழுது பூட்ஸ்பேஸ் 644 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக தார் ராக்ஸ் மாடல் வடிவமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் இட வசதிக்கான அம்சம் உள்ள மாடலாக பார்க்கப்படுகின்றது.