நிகழ்காலத் தொழில்நுட்பம் கால்பந்து அனுபவத்தை பெரிய அளவில் மாற்றியுள்ளது. ஒளிபரப்பு தொழில்நுட்பம், உடனடி ரீப்ளே சிஸ்டம், ஜி.பி.எஸ், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட் மைதானங்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற பல தொழில்நுட்பங்கள் இன்று கால்பந்தில் பயன்படுத்தப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்களின் வருகையால், கால்பந்தின் பரிமாணம் வேறு நிலையை எட்டியுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட காட்சிகள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பார்வையாளர்கள் நிகழ்நேரத்தில் கால்பந்தை தெளிவாக இன்புற்று கண்டுகளிக்கவும் இந்த தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. அவை என்ன என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
1. வீடியோ உதவி நடுவர் (VAR):
விளையாட்டின் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை மெதுவாக்கி மீண்டும் இயக்க, வீடியோ கண்காணிப்பு தொழில்நுட்பத்தை VAR பயன்படுத்துகிறது. விளையாட்டில் ஏதேனும் பிழைகள், தெளிவற்ற அல்லது சந்தேகத்திற்கிடமான விஷயங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. VAR தொழில்நுட்பம் சர்வதேச கால்பந்து சட்டம் 2018-19 இல் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் 2018 ஃபிஃபா (FIFA 2018) உலகக் கோப்பை போட்டியில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கோல்களை உறுதிப்படுத்தவும், 16 பெனால்டிகளை வழங்கவும், மைதானத்தில் விளையாட்டின் போது அரங்கேறும் 455 சம்பவங்களை மதிப்பாய்வு செய்யவும் VAR பயன்படுத்தப்பட்டது.
2. செமி ஆட்டோமேட்டிக் ஆஃப்சைட் தொழில்நுட்பம் (SAOT):
கால்பந்து போட்டிகளில் ஆஃப்சைடுகளைக் கண்டறிய VAR தொழில்நுட்பம் உங்களுக்கு உதவ முடியும் என்றாலும், அதற்கு நிறைய நேரம் எடுக்கும். விளையாட்டின் நடுவில் எழும் VAR விமர்சனம் பெரும்பாலும் பார்வையாளர்களின் மனநிலையை பறிக்கும் ஒன்று. ஆனால் செமி ஆட்டோமேட்டட் ஆஃப்சைட் தொழில்நுட்பம் என்பது இதுபோன்ற சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகும்.
இதையும் படிங்க: இப்படி ஒரு படகை வாங்கணும்: அசரடிக்கும் திறனுடன் கேண்டேலா சி-8 மின்சாரப் படகு உலக சாதனை!
மைதானத்தைச் சுற்றி பொருத்தப்பட்ட 12 கேமராக்கள் வாயிலாக ஆஃப்சைடு தொழில்நுட்பம் செயல்படுகிறது. இந்த கேமராக்கள் ஒவ்வொரு வீரரின் பல தரவு புள்ளிகளையும், பந்தையும் விநாடிக்கு 50 முறை கண்காணிக்கும். ஆஃப்சைட் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க பந்தில் உள்ள சென்சாரில் இருந்து வரும் சமிக்ஞையைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் அதைப் பார்க்கலாம். இது சரியான இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கும். இந்த தரவு பின்னர் பிரதான நடுவருக்கு வழங்கப்படும்.
கத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 (FIFA 2022) ஆண்கள் உலகக் கோப்பையில் இந்த தொழில்நுட்பம் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. பிரீமியர் லீக் கிளப்புகள் 2024-25 சீசனில் நடைபெறும் போட்டிகளில் SAOT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன.
3. கோல்-லைன் தொழில்நுட்பம் (Goal-line technology):
கால்பந்து, கோல் போஸ்ட்டுக்குள் சென்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இது. கால்பந்து கோல் கோட்டுக்குச் சென்றதா என்பதை நடுவர்களால் தீர்மானிக்க முடியாத சந்தர்ப்பங்களில் கோல்கள் பெரும்பாலும் உடனடியாக வழங்கப்படுவதில்லை. ஆனால் கோல்-லைன் தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து, அது கோல் கோட்டைத் தாண்டியதா என்பதை சரிபார்ப்பது எளிதாகிவிட்டது. கோல் போஸ்ட்டைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள அதிவேக 14 கேமராக்கள் மற்றும் சென்சார்களின் உதவியால் கோல்-லைன் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.