ஹைதராபாத்: ஒரு விண்கலத்தில் ஏறி சூரிய குடும்பத்தைச் சுற்றி வந்து விட முடியுமா? இதற்கு வாய்ப்பில்ல ராஜா என சிம்பிளா சொன்னாலும், இருக்கு! வாய்ப்பு இருக்கு! னு அடிச்சு சொல்லிருக்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA (European Space Agency). இதற்கான விரிவான விடைதான், JUICE திட்டம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த Jupiter Icy Moons Explorer எனும், வியாழன் கிரகத்தின் நிலவுகளை ஆய்வு செய்வதற்கான விண்கலம், தற்போது மீண்டும் பூமிக்கு வந்துள்ளது. இது ஏன் இப்படி வந்துள்ளது, நேராக வியாழனை நோக்கிச் செல்ல வேண்டியது தானே என உங்களுக்குத் தோன்றலாம். இதற்கெல்லாம் விடையை இந்த செய்தித் தொகுப்பில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையின் விளக்கத்துடன் காணலாம்.
அது என்ன JUICE திட்டம்?Jupiter Icy Moons Explorer என்ற பெயரின் சுருக்கம் தான் JUICE. சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள் தான் வியாழன். சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் சேர்த்தால் என்ன அளவு வருமோ, இதனைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது வியாழன். இந்த வியாழன் கிரகத்தை இதுவரையிலும் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 95 நிலவுகள் சுற்றி வருகின்றன.
இவற்றில், Ganymede, Callisto மற்றும் Europa என்ற உறைநிலையில் இருக்கும் மூன்று நிலவுகளை மட்டும் ஆராய்ச்சி செய்வதும், இவற்றில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். பூமியிலிருந்து வியாழன் சுமார் 784.32 மில்லியன் கிலோ மீட்டர் (சுமார் 78 கோடி கிலோ மீட்டர்) தொலைவு கொண்டது. கடந்த 2023 ஏப்ரல் 13ஆம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலம், 8 ஆண்டுகள் பயணித்து 2031 ஜூலை மாதத்தில் வியாழனைச் சென்றடையும்.
கடந்த ஆண்டு ஏவப்பட்டு தற்போது பூமிக்கு அருகில் வந்து கடந்து சென்றிருக்கும் இந்த விண்கலம் (Earth Flyby), புவியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சரியாக திசை திருப்பப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு விசையை இதே போன்று பயன்படுத்தி 2025ஆம் ஆண்டில் வேகம் பெற்று செலுத்தப்படும்.
பின்பு 2029ஆம் ஆண்டு மீண்டும் பூமிக்கு வரும் இந்த JUICE விண்கலம். கிட்டத்தட்ட ஒரு உண்டி வில்லில் கல்லைச் செலுத்த எப்படி பின்னோக்கி இழுக்கிறோமோ, இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான், கிரகங்களால் ஈர்க்கப்பட்டு மீண்டும் விண்வெளியில் விடுவிக்கப்படும் போது இந்த விண்கலம் வேகம் பெறுகிறது.
இத்திட்டம் குறித்த அறிவியல் தகவல்களை இஸ்ரோ முன்னாள் இயக்குனரும், இந்தியாவின் The Moon Man என்று அறியப்படுபவருமான மயில்சாமி அண்ணாதுரை, எளிய மொழியில் ஈடிவி பாரத்திற்காக பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “13 ஐரோப்பிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இந்த திட்டம் சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுப் பகிர்வுக்கு ஒரு உதாரணம்" என்றார்.
இந்தியாவின் சந்திரயான் திட்டத்திலும் இதே போன்று தான் அமெரிக்கா, பிரான்ஸ், பல்கேரியா, ஜப்பான், இத்தாலி என பல்வேறு நாடுகள் பங்களித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். பல்வேறு கிரகங்களின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி எப்படி மொத்த சூரிய குடும்பத்தையும் வலம் வர முடியும் என்பதை இந்த திட்டம் எடுத்துக் காட்டுவதாகக் கூறிய அவர், முன்னாட்களில் இதற்கான கருத்துருக்களை (Theoretical data) இஸ்ரோ சார்பில் தாங்கள் முன்வைத்ததையும் நினைவு கூர்ந்தார்.
Earth Flyby என்றால் என்ன? Flyby என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கடந்து செல்தல் என்பது பொருள். விண்வெளி மொழியில் புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை வட்டத்திற்குள் சென்று, அதன் சுற்றுவட்டப்பாதையிலோ, அல்லது தரையிறங்கவோ இல்லாமல், கடந்து செல்வது தான் என புரிந்து கொள்ளலாம்.
Flyby வேகத்தை எப்படி அதிகப்படுத்தும்? விண்வெளியில் சாதாரணமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு விண்கலம், ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும் போது அதன் பாதை மாறுபடும். வேகமும் மாறுபடும் இதனைத்தான் ஈர்ப்பு விசை உதவி அல்லது உண்டி வில் விளைவு என்கின்றனர். (gravity assist or slingshot effect). உண்டிவில்லிருந்து புறப்படும் கல்லுக்கு எப்படி வேகம் கிடைக்கிறதோ, அது போன்ற கிரகத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபடும் விண்கலமும் வேகம் பெற்று அதிவேகத்தில் பயணிக்கும்.
இதையும் படிங்க:60 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தவிக்கும் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? நாசா கூறுவது என்ன?