ஏஐ இல்லாத போன்களை மக்கள் விரும்பமாட்டார்கள் - கவுண்டர்பாயின்ட்
ஜெனரேடிவ் ஏஐ (GenAI) தொழில்நுட்பத்துடன் வரும் ஸ்மார்ட்போன்கள் தான் வரும் காலங்களில் சந்தையை ஆட்கொள்ளும் என கவுண்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (கோப்புப் படம்) (Meta / ETV Bharat)
ஜெனரேட்டிவ் ஏ.ஐ (GenAI) செயல்பாடுகளை கொண்ட ஸ்மார்ட்போன்கள் எதிர்காலத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கவுள்ளன. கவுண்டர்பாயின்ட் ஆய்வுகளின்படி (Counterpoint Research), 2028 ஆம் ஆண்டுக்குள் GenAI ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 730 மில்லியன் யூனிட்டுகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் வரும் ஸ்மார்ட்போன்கள் 19% சந்தை மதிப்பைக் கொண்டிருந்தாலும், 2028ஆம் ஆண்டில் இதன் சந்தை மதிப்பு 54% ஆக உயரும் என கவுண்டர்பாயின்ட் கணித்துள்ளது.
முன்னணி நிறுவனங்களின் ஆதிக்கம்:
GenAI புரட்சியின் தொடக்க கட்டங்களில், சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்கள் சந்தையை வழிநடத்தும் என்று கவுண்டர்பாயின்ட் தெரிவித்திருக்கிறது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் ஜென் ஏஐ ஸ்மார்ட்போன் சந்தையில் 75% தங்கள் வசம் வைத்திருப்பதாக ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
கேலக்சி ஏஐ, ஆப்பிள் இண்டலிஜென்ஸ் (Meta / ETV Bharat)
"சாம்சங், ஆப்பிள் ஆகிய இருவேறு நிறுவனங்களும், முதல் தலைமுறை பிரீமியம் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதில் திறன் படைத்திருக்கிறது," என கவுண்டர்பாயின்ட் இந்த நிறுவனங்களின் விளம்பரத் தந்திரங்களை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது.
கவுண்டர்பாயின்ட் ஆய்வுகளின்படி, தொடக்க காலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டும் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, காலப்போக்கில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் அனைத்து தரப்பிலான போன்களிலும் இருக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
எதிர்கால சாத்தியங்கள்:
GenAI ஸ்மார்ட்போன்களில் உள்ள சில ஆரம்ப பயன்பாடுகளை கவுண்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,
மேம்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ தரம்: AI வாயிலாக இயக்கப்படும் படம் மற்றும் வீடியோ செயலாக்கம்.
நேரடிச் செய்தி மொழிபெயர்ப்பு: பல மொழிகளுக்கு இடையேயான உரையாடலை நேரடியாக மொழிபெயர்ப்பது.
பரிந்துரைகள்: நம் பயன்பாட்டை கணித்து தேவையானவற்ற செயற்கை நுண்ணறிவு திறனுடன் பரிந்துரைப்பது.
ஆட்டோமேட்டிக் கண்டென்ட்: ஏஐ உதவியுடன் உரை, படம், இசை போன்ற கண்டென்டுகளை உருவாக்கும் திறன்.
ஆகியவை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்து வாடிக்கையாளர்களை ஏஐ சார்ந்திருக்கும் போன்களை வாங்கத் தூண்டும் என்பது ஆய்வு நிறுவனத்தின் கணிப்பாக உள்ளது.
GenAI ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரிப்பால், செமிகண்டக்டர் உற்பத்தித் துறையும் பெரும் வளர்ச்சியை காணும் என்கிறது ஆய்வு முடிவுகள். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் செமிகண்டக்டர் துறை 339 பில்லியன் டாலர் மதிப்புக்கு உயரும் என்று கவுண்டர்பாயின்ட் கணித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணமாக GenAI செயலாக்கத்தின் தேவைகள் குறிப்பிடப்படுகின்றன. 2030ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களுக்கான மொத்த உற்பத்தி பொருள் செலவில், 45 விழுக்காட்டை செமிகண்டக்டர்கள் எடுத்துக்கொள்ளும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
GenAI தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்பட்டுவரும் நிலையில், புதுமையான பல பயன்பாடுகள் சந்தைக்குள் அறிமுகம் செய்யப்படும். இவை நம் செல்போன் பயன்பாட்டையும், அதன் முறையையும் மாற்றியமைக்கும் என்பதை கவுண்டர்பாயின்ட் ஆய்வு முடிவுகள் உணர்த்தியுள்ளது.