உள்நாட்டின் மிகப்பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், விரைவில் பிக் பில்லியன் டே சேல் எனும் சலுகை தினங்களைத் தொடங்கவுள்ளது. இந்த சூழலில், பிளிப்கார்ட் செயலியில் உள்ள ‘பிராண்ட் மால்’ (Brand Mall) தளத்தின் வாயிலாக நடத்தப்பட்ட ஃபயர்டிராப் சேலஞ்சில், (Firedrop Challenge) மோட்டோரோலா ஜி85 ஸ்மார்ட்போன் சலுகைக்காகப் பங்கேற்ற வாடிக்கையாளர்களுக்கு 99% கூப்பன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கூப்பனை வைத்து மோட்டோ போனை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை பிளிப்கார்ட் (Flipkart) ரத்து செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்காக நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதாவது, இதில் தங்களின் தவறு ஒன்றுமில்லை எனவும், விற்பனையாளர்கள் (Flipkart Sellers) தான் இதற்கு முழு பொறுப்பு எனவும் பிளிப்கார்ட் பதில் அளித்துள்ளது. இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் #FlipkartScam எனும் ஹேஷ்டேகை உருவாக்கி இன்று (செப்டம்பர் 18) காலைமுதல் தங்களின் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து வருகின்றனர்.
பிளிப்கார்ட் மீது நுகர்வோர் வெறுப்பு:
ஒரு பயனர் இது குறித்து தெளிவாக பதிவிட்டுள்ளார். அதில், "Firedrop 99% தள்ளுபடி ஆஃபர் தொடர்பாக எங்களுக்குப் பல்வேறு கவலைகள் உள்ளன. இது முழுக்க ஒரு மோசடியாகத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான பயனர்களை ஏமாற்றுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, Flipkart "Firedrop" சேலஞ்சில் பயனர்கள் தள்ளுபடி கூப்பன்களையும், பேட்ஜுகளையும் பெற்றனர். அதை வைத்து ரூ.17,999 மதிப்புள்ள மோட்டோரோலா ஜி85 (Motorola G85) 128ஜிபி வகை ஸ்மார்ட்போன் ரூ.179 என்ற விலைக்கு கிடைக்கும் எனக் கூறப்பட்டது. பின்னர் டெலிவரி மற்றும் பிளாட்ஃபார்ம் கட்டணங்களுடன் மொத்தம் ரூ.222 ஆகிவிட்டது."
"பல பயனர்கள் இந்த விலையில் மோட்டோ போனை வாங்கியுள்ளனர். ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இந்த தள்ளுபடி உடனான ஆர்டரை நிறுவனம் ரத்து செய்துவிட்டனர். பிளிப்கார் வாடிக்கையாளர் சேவையை அணுகியபோது, இது விற்பனையாளர் பிரச்சினை என்று கூறுகிறது. ஆனால் அதில் என்ன அர்த்தம் உள்ளது."