பெங்களூரு: இந்தியா அடுத்த ஆண்டில் ககன்யான், சமுத்ரயான் ஆகிய திட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து 2027 இல் சந்திரயான்-4 ஏவப்படும். இந்த சூழலில் இஸ்ரோ (ISRO) தலைவர் வி நாராயணன், ஈடிவி பாரத் பத்திரிகையாளர் அனுபா ஜெயின் உடனான ஒரு பிரத்யேக நேர்காணலில், இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் அடுத்த நிலவுப் பயணமான சந்திரயான்-4 குறித்த பல சிறப்புத் தகவல்களை பகிர்ந்துள்ளார். கூடுதலாக, அவர் சந்திரயான்-4 க்கும் சந்திரயான்-3 க்கும் இடையிலான வேறுபாட்டையும் விளக்கினார். இந்த பிரத்யேக நேர்காணலின் விவரங்களை இப்போது பார்ப்போம்.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக அளவில் ஒரு புதிய சாதனையை படைத்தது. ஏனெனில், அது அவ்வாறு செய்த உலகின் முதல் விண்வெளி நிறுவனமாக ஆனது. இது குறித்து இஸ்ரோ தலைவர் வி நாராயணன் கூறுகையில், "சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய பிறகு, மேற்பரப்பு தாதுக்கள், வெப்ப சாய்வுகள், எலக்ட்ரான் மேகங்கள், பூகம்ப செயல்பாடுகள் குறித்த பல சிறப்புத் தரவுகளை வழங்கியுள்ளது. ஆனால் சந்திரயான்-4 அதை விட ஒரு பெரிய படியாக இருக்கும். இது நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்குவது மட்டுமல்லாமல், அங்கிருந்து மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனையும் செய்யும்." என்று தெரிவித்தார்.
சந்திரயான்-4 குறித்து விரிவான தகவல்களை வழங்கிய இஸ்ரோ தலைவர், சந்திரயான்-4 செயற்கைக்கோளின் எடை 9,200 கிலோவாக இருக்கும் எனவும், இது சந்திரயான்-3 இன் 4,000 கிலோவை விட மிகவும் அதிகம் என்று கூறினார்.
மேலும், "அதன் பெரிய அளவு காரணமாக, அதை விண்வெளியில் அனுப்ப இரண்டு மார்க் 3 (Mark III) ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். இந்த முழு திட்டமும் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்படும். அவை இரண்டு குழுக்களாக (Stacks) பிரிக்கப்படும். இந்த தொகுதிகள் பூமியின் சுற்றுப்பாதையில் ஒன்றிணைந்த பின், அங்கு ராக்கெட்டின் உந்துதல் அமைப்பு பிரிக்கப்படும்."
தொடர்ந்து பேசிய நாராயணன், "சந்திரயான்-4 திட்டத்தின் கீழ் நான்கு தொகுதிகள் நிலவின் சுற்றுப்பாதைக்குச் செல்லும். அவற்றில் இரண்டு நிலவின் மேற்பரப்பில் இறங்கும். அவற்றில் ஒன்று மட்டுமே மாதிரி தொகுதியாக இருக்கும். அது மட்டும் பூமிக்குத் திரும்பும். மற்ற இரண்டு தொகுதிகள் நிலவின் சுற்றுப்பாதையில் இருக்கும். அதாவது, இஸ்ரோ ஒரு தொகுதியை நிலவின் மேற்பரப்பில் விட்டுவிடும்," என்று தெரிவித்தார்.
இவை அனைத்தையும் தவிர, இஸ்ரோ தலைவர் இந்த நேர்காணலில் வீனஸ் திட்டம் (வெள்ளி கிரகம்) குறித்து பேசினார். வீனஸ் திட்டம், செவ்வாய் சுற்றுப்பாதை திட்டம் (Mars Orbiter Mission) உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இருப்பினும், தங்களது சிறப்பு கவனம் லூனார் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் திட்டத்தின் (LUPEX) மீது உள்ளதாக கூறினார்.
“இது சந்திரயான்-3 திட்டத்தின் பெரிய மற்றும் மேம்பட்ட பதிப்பாகும். இந்த திட்டத்தில் 250 கிலோ எடை கொண்ட ஒரு ரோவர் இருக்கும். அதே நேரத்தில் சந்திரயான்-3 ரோவரின் எடை வெறும் 25 கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துக்கான தயாரிப்புகள் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து செய்யப்படுகின்றன. இது நிலவை ஆராய்வதற்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் ஒரு முக்கியமான படியாக இருக்கும்." என நாராயணன் குறிப்பிட்டார்.