கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்; எச்சரிக்கும் CERT-In: என்ன செய்வது?
கூகுள் குரோம் (Google Chrome), ஆண்ட்ராய்டு பயனர்கள் உடனடியாக தங்களின் இயங்குதளம் மற்றும் செயலிகளை புதுப்பித்துக் (update) கொள்ளுமாறு இந்திய அரசின் கீழ் இயங்கும் CERT-In அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
கூகுள் குரோம் பிரவுசர்களை உடனடியாக அப்டேட் செய்யும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. (ETV Bharat Tamil Nadu)
இந்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசின் அவசரகால கணினி பதிலளிப்புக் குழு (CERT-In), கூகுள் குரோம் (Google Chrome), ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு "உயர் ஆபத்து" எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதில், பல கடுமையான பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக CERT-In வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு சிக்கல்களை, CIVN-2024-0319 மற்றும் CIVN-2024-0318 என்று வகைப்படுத்தி CERT-In விவரித்துள்ளது. இது ஆண்ட்ராய்டு 15, 14, 13, 12, 12L ஆகிய இயங்குதளப் பதிப்புகளில் இயங்கும் மொபைல் போன்கள் மற்றும் கேட்ஜெட் வாயிலாக கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் நடக்கலாம்!
உலகின் முதன்மையான இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருக்கிறது. இதில் இருக்கும் கூகுள் குரோம் பிரவுசர் உதவியுடன் தான் பயனர்கள் இணைய தேடல்களை நடத்துகின்றனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள தீங்கிழைக்கும் பக்குகள் (Bugs) இவர்களை நோட்டமிட்டு தரவுகளை திருடும் என CERT-In எச்சரிக்கிறது.
கூகுள் குரோமின் வி8 ஜாவா, பிரவுசரின் கட்டமைப்பு (Framework) போன்றவற்றில் சில தீங்கிழைக்கும் பக்குகளை கணினி பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. இவை சாப்ட்வேர் மட்டுமல்லாமல், மீடியாடெக், குவால்காம் போன்ற ஹார்ட்வேர்களையும் தாக்கும் வல்லமை கொண்டதாகக் கருதப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி கொள்ளும் சைபர் குற்றவாளிகள், பயனர்களை குறிப்பிட்ட வகையில் உருவாக்கப்பட்ட வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்றோ அல்லது தீங்கிழைக்கும் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யவோ தூண்டி, அந்த கேட்ஜெட்டுக்கான அணுகலைப் பெறுகின்றனர். இதன் வாயிலாக தனியுரிமை ஆவணங்களை திருடவோ, தீங்கிழைக்கும் மால்வேர்களை நிறுவவோ அவர்களால் முடியும்.
சுதாரித்துக் கொண்ட கூகுள்:
எனினும், கூகுள் இந்தப் பாதுகாப்பு சிக்கல்களை முன்னதாகவே அறிந்து, பாதுகாப்பு புதுப்பிப்புகளை (அப்டேட்டுகளை) வெளியிட்டுள்ளது. பயனர்கள், தங்களின் கேட்ஜெட்டுகளை பாதுகாக்க, புதிய அப்டேட்டுகளை உடனடியாக நிறுவ வேண்டும் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.