டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் பெரும் மதிப்புமிக்க நிறுவனமாக, கார் விரும்பிகளை திருப்திப்படுத்தும் வகையில் பல்வேறு தளங்களில் பட்ஜெட் விலையில் கார்களை களமிறக்கி வருகிறது. தற்போது, நிறுவனம் தங்களின் மேம்படுத்தப்பட்ட 'டாடா நெக்சான்' காரின் 2025 மாடலை களமிறக்கியுள்ளது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சம் முதல் தொடங்குகிறது என்பது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் புதிய நெக்சான் காரின் வண்ண விருப்பங்கள், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், வகைகள் குறித்து தங்களின் எக்ஸ் தளத்தில் டாடா மோட்டார்ஸ் பதிவிட்டுள்ளது.
2025 டாடா நெக்சான் விலை:
சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் நெக்சான் கார்களின் அடிப்படை மாடல் விலையிலே, புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலையும் தொடங்குகிறது. மேலும், புதிய மாடலில் ஒரு புதுவிதமான வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு, 'கிராஸ்லேண்ட் பெய்ஜ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக நெக்சான் வகைகளில் ப்யூர்+, கிரியேட்டிவ், கிரியேட்டிவ்+ ஆகிய மூன்று மாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
- டாடா நெக்சான் ப்யூர்+ - ரூ.9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- டாடா நெக்சான் கியேட்டிவ் - ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- டாடா நெக்சான் கியேட்டிவ்+ - ரூ.12.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
2025 டாடா நெக்சான் புதிய அம்சங்கள் என்ன?
டாடா மோட்டார்ஸின் இந்த ஆண்டு பட்ஜெட் காராக வெளியாகியுள்ள நெக்சான், சில மேம்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய காரில் வாய்ஸ் அசிஸ்டட் பேனரோமிக் சன்ரூஃப், காற்றோட்ட அமைப்புடன் வரும் லெதர் இருக்கைகள்,10.24 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஹார்மன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா ஆதரவுடன் மெருகேற்றப்பட்டுள்ளது.