ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-பியூல் பைக் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. 300சிசி வகைகளில் இந்திய சாலைகளை அலங்கரித்து வரும் பைக்குகளில் இது சற்று வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எத்தனால் இசைவு எஞ்சின் தான்.
இதில் E85 தரத்திலான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில், இந்தியாவின் முதல் 300சிசி CB300F ஃப்ளெக்ஸ்-ஃபியூல் (CB300F Flex-Fuel) பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஹோண்டா பிக்விங் (Honda BigWing) டீலர்ஷிப் கடைகளில் புதிய ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-ஃபியூல் பைக்கை முன்பதிவு செய்யலாம். இதன் டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை ரூ.1,70,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் தங்களின் தயாரிப்புகளில் கார்பன் உமிழ்வைக் குறைப்பது தான் லட்சியம் எனவும், இந்திய அரசின் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை நிறுவனம் தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் சுட்சுமு ஓட்டானி இந்த பைக் அறிமுக நிகழ்வில் தெரிவித்தார்.
சிறப்பம்சங்கள்:
- E85 எரிபொருளுக்கு இணக்கமான பைக் (85% எத்தனால் & 15% பெட்ரோல்)
- சக்திவாய்ந்த 293.52cc, ஆயில்-கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் PGM-FI எஞ்சின்
- 18.3 கிலோவாட் சக்தி மற்றும் 25.9 நியூட்டன் மீட்டர் (Nm) டார்க்
- 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்
- அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச்
- இரட்டை சேனல் ஏபிஎஸ் (ABS) உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள்
- ஹோண்டாவின் தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கட்டுப்பாடு (HSTC)
- தங்க நிற தலைகீழான (USD) முன்பக்க ஃபோர்க்குகள்
- 5 அளவுகளில் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் சஸ்பென்ஷன்
- முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்
- எத்தனால் மீட்டர்