ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் (Apple iPhone 16 Series) ஸ்மார்ட்போன்கள் விற்பனை நேற்று (செப்டம்பர் 20) தொடங்கியது. இதனை வீட்டு உபயோக அத்தியாவசிய பொருள்களை உடனடியாக டெலிவரி செய்யும் நிறுவனமான பிளிங்கிட் (Blinkit), தங்கள் தளத்தில் பட்டியலிட்டு, ஆர்டர் செய்பவர்களுக்கு 10 நிமிடங்களில் ஐபோன் 16 மொபைல்கள் டெலிவரி செய்யப்படும் என்று கூறியிருந்தது. இதனையடுத்து, இரண்டரை மணிநேரத்தில் சுமார் 300 ஐபோன் 16 மொபைல்களை நிறுவனம் விற்றுள்ளது.
இந்த விற்பனைக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிளிங்கிட் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா, "மூன்றாவது வருடமாக யுனிகார்ன் ஏபிஆர் (UnicornAPR) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு (இந்த வருடம் முதல்) ஆகிய நகரங்களில் ஐபோன் 16 மாடல்களை 10 நிமிடங்களில் டெலிவரி கொடுக்க உள்ளோம். கடன் அட்டை, சுலப மாதத் தவணைத் திட்டங்களையும் யுனிகார்ன் ஏபிஆர் கொண்டுள்ளது," எனத் தெரிவித்திருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 18 (iOS 18) இயங்குதளத்துடன் ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. எனினும், அடிப்படை மாடலான ஐபோன் 16, அதன் மேம்பட்ட பதிப்பான ஐபோன் 16 பிளஸ் ஆகிய இரு மாடல்கள் மட்டுமே பிளிங்கிட்டில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.
செப்டம்பர் 20, நேற்று நடந்த விற்பனை குறித்துப் பதிவிட்டிருக்கும் அல்பிந்தர், "நாங்கள் காலை 8 மணிமுதல் ஐபோன் 16 போன்களை டெலிவரி செய்யத் தொடங்கினோம். 300 போன்கள் விற்பனையைத் தொட இன்னும் சில நிமிடங்களே உள்ளன. இன்று ஒரு 'Crazy Day' ஆக இருக்கப் போகிறது," என்று பதிவிட்டிருந்தார்.
இவர் இந்த பதிவை இடுகையில் செப்டம்பர் 20 நேரம் காலை 10:30 ஆகும். அதில், விற்பனையின் எண்ணிக்கை தொடர்பான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், '295' எனும் எண் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, வெறும் இரண்டரை மணிநேரத்தில் 295 ஐபோன் 16 மொபைல்களை பிளிங்கிட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இதையும் படிங்க: