ஐதராபாத் : இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான விரும்பத்தகாத அல்லது வன்முறையை தூண்டக் கூடிய வகையிலான பதிவுகளை கண்டிறிந்து அது குறித்து நடவடிக்கை எடுக்க கூடிய வகையில் தேர்தல் செயல்பாட்டு மையம் தொடங்கப்படும் என்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தனது 18வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தவும், வாக்காளர் குறுக்கீட்டை அகற்றவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை ஆதரிப்பதற்காகவும் சமூக வலைதளங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் மெட்டா நிறுவனம் முயற்சிகளை தொடரும்.
GenAI போன்ற புதிய தொழில்நுட்பங்களை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும், AI பயன்பாட்டிற்கான தொழில்நுட்ப தரநிலைகளில் தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத அல்லது வன்முறையை தூண்டக் கூடிய மற்றும் பொய் பிரச்சாரங்களை தடுக்க சிறப்பு செயல்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தேர்தல் தொடர்பான நெறிமுறைகளை தனார்வ அடிப்படையில் உருவாக்கியும் சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் முன்னுரிமை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எது உண்மை என்பது தெரிந்து கொள்ளுங்கள் (Know What’s Real) என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து ஏறத்தாழ 8 வார நீண்ட தேர்தல் தொடர்பான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள தவறான தகவல்களை கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பது, சந்தேகத்திற்கிடமான அல்லது தவறான தகவல்களை வாட்ஸ்அப் டிப்லைன்களுக்கு அனுப்புவதன் மூலம் இருமுறை சரிபார்க்க மக்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ் அப்பில் பகிரப்படும் பார்வேர்டு மெசேஜ்களை ஒரே நேரத்தில் ஒரு குழுவிற்கு மட்டுமே அனுப்பக் கூடிய வசதியை தொடரும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு 5 குழுக்களுக்கு பார்வேர்டு மெசேஜ்களை பகிரக் கூடிய நிலையை ஒன்றாக குறைத்து மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!