சென்னை:மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை கடத்தல் மன்னனும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூலையாகச் செயல்பட்டு வந்த தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவரைக் கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மேலும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்துள்ளனர்.