தூத்துக்குடி: முறப்பநாடு அருகே உள்ள பக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (28). இவர் சில வருடங்களுக்கு முன்பாக 17 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வடிவேல் முருகனுக்கும் அந்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்துள்ளது.
திருமணம் ஆகி சில வருடங்கள் ஆனதால் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகப் பெண்ணின் தந்தை தான் அளித்த போக்சோ வழக்கை முடித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று (பிப்.28) நீதிமன்றத்தில் வடிவேல் முருகன் ஆஜராகி உள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வடிவேல் முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, தெய்வச்செயல்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.