தேனி:தேனி மாவட்டம் அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 35). இவரது மனைவி அஜித்தா (33). இவர்களுக்கு 5 வயதில் பிரித்விகா என்ற மகள் இருந்து வந்த நிலையில், அஜித்தா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். இந்த குடும்பத்தினர் அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.
சதீஷ்குமார் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் தனியாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த சதீஷ்குமார், மன வருத்தத்தில் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் அஜித்தாவின் குடும்பத்தினர், நேற்று காலை முதல் தம்பதியினர் இருவருக்கும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை சதீஷ்குமாரின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அஜித்தாவின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பெண்ணின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வந்து பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்த போது அங்கு அஜித்தா மற்றும் குழந்தை பிரித்திகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.