திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தராப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(32). இவர் வெளி நாடுகளுக்கு வேலை ஆட்களை அனுப்பும் எஜென்சி ஒன்றை அதே பகுதியில் பல வருடங்களாக நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகத்தில் வேலூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை சம்பந்தமாக சில ஆவணங்களைக் கேட்டு, கோபாலகிருஷ்ணன் அந்த பெண்ணை அடித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் கோபாலகிருஷணனைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் மீது புகார்:இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது சிறை செல்வதற்கு முன்பாகவே ரிமாண்ட் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் 75 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று ஆய்வாளர் லதா மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கேட்டனர் என கூறினார்.