தஞ்சாவூர்:தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்கள் பனைமர காலமாகும். எனவே, பனையேறிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக பனை பொருட்கள் மூலம் வாழ்வாதாரம் வழங்கிய பனை மரங்களுக்கு நன்றி தெரிவித்து துலுக்கம்பட்டி மக்கள் படையலிட்டு வழிபாடுகள் செய்தனர்.
பனை மரத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா (Credits - ETV Bharat Tamil Nadu) தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டியில் ஏராளமான பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த பனை மரங்கள் மூலம் ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் கிடைக்கும் கள், நுங்கு, பதனீர் உள்ளிட்ட பனைப் பொருட்கள் மூலம் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய பனை மரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துலுக்கம்பட்டி கிராமத்தில், பனைமரங்களுக்கு பனைப் பொருட்களை வைத்து படையலிட்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், பனை மரத்திற்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்தும், பனை தொழிலுக்கு உதவியாக இருக்கும் உபகரணங்கள் மற்றும் பனையில் இருந்து கிடைத்த உணவுப் பொருட்களான கள் கலையம், பதனீர், நுங்கு இவற்றுடன் அசைவ உணவு வைத்து படையலிட்டு சூடம் ஏற்றி வழிபட்டனர். விவசாயிகள் தை முதல் நாளை பொங்கல் பண்டிகையாக கொண்டாடுவது போல், தாங்கள் வைகாசி மாதம் நல்ல நாளில் பனை படையல் விழாவை கொண்டாடுவதாக பனை மரம் ஏறுபவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பாரில் மோதல்.. டிஜே ஆர்ட்டிஸ்ட் சுட்டுக் கொலை.. ஜார்கண்ட்டில் பயங்கரம்..! - Bar Dj Murder