மதுரை:உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உலகின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.24) திறந்து வைத்தார். மேலும், அரங்கத்தின் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் இவ்விழா மேடையில் சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், 'வீரதீர விளையாட்டு களத்தை திறந்து வைக்க வந்திருக்கிறேன். மதுரையை 'தூங்கா நகரம்' என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால், தோல்வியை தூள்தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி, சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலேயே திமில் காளைகள் இருக்கிறது. “எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்” என்று ஏறுதழுவுதல் காட்சியை நம்முடைய கண்முன்னே கொண்டு வருவது கலித்தொகை.
1974ஆம் ஆண்டு சனவரி மாதம் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்தியவர், கலைஞர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதியளித்து, அனுமதியைப் பெற்றவர் கலைஞர். 2007ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் திமுக ஆட்சியில்தான்.
ஆட்சி மாறியதும், 2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது. நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, ‘மெரினா தமிழர் புரட்சி’ என்று சொல்கின்ற அளவிற்கு 2017-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னைக் கடற்கரையில் நடந்தது. அமைதி வழியில் போராடியவர்கள் மேல் வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அதிமுக ஆட்சி. அவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தி, அந்த கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது.
தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அதிமுக ஆட்சி அடிபணிந்தது. அதன் பிறகுதான் மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்தும் நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுதான் இருந்தது.
அந்த வழக்கில், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னது தெரியுமா? ''ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும், கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை" என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவித்தார்கள்.
நமது திராவிட மாடல் அரசு நீதிமன்றத்தில் என்ன சொன்னது? ”ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி இல்லை. அது உழவர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்தது. போட்டிகளை பாதுகாப்பாக நடத்துகிறோம். காளைகளை நமது குடும்பங்கள் கவனத்தோடு வளர்க்கிறோம்” என்று அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைத்தோம். திராவிட மாடல் அரசின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோம். இவ்வளவு தடைகளையும் தி.மு.க. அரசு உடைத்து எறிந்ததால்தான் இன்று ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Live: உலகின் முதல் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு.. மதுரை கீழக்கரையில் இருந்து நேரலை!