தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 3:09 PM IST

ETV Bharat / state

இனிமே டிராஃப்பிக்ல மாட்டிக்க வேணா... ஊட்டிக்கு புதிய பாதை பணிகள் தீவிரம்! - Ooty New Road

Ooty New Road: உதகைக்கு 40 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாவது மாற்றுப்பாதைக்கு உண்டான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த சாலை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்து உள்ளனர்.

ஊட்டிக்கு புதிய பாதை அமைக்கும் பணி
ஊட்டிக்கு புதிய பாதை அமைக்கும் பணி (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி:மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகைக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.

ஏப்ரல், மே உள்ளிட்ட மாதங்களில் சமவெளி பகுதிகளில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலை காரணமாக, அந்த மாதங்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். பல வருடங்களாக சமவெளி பகுதிகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலையில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மூன்றாவது மாற்றுப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது உதகை அருகே உள்ள காந்திபேட்டை பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் செல்ல மூன்றாவது மாற்று பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 80% முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு சாலை திறக்கப்படவுள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்துவரும் வாகனங்கள் குன்னூருக்கு செல்லாமல் நேரடியாக உதகைக்கு வர இந்த சாலையை அமைக்கப்பட்டு வருகிறது. 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் இந்த சாலை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலைப்பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ், கெந்தலா , கேத்தி, பாலடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக உதகைக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் சமவெளி பகுதியில் இருந்து பல வாகனங்கள் குன்னூர் செல்லாமல் உதகைக்கு செல்ல முடியும். இதனால் பல இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும். இந்த பணிகளை விரைவில் முடித்து இரண்டாம் சீசனுக்குள் சமவெளி பகுதியிலிருந்து வாகனங்களை அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேட்டுப்பாளையம் - உதகை மலை பாதையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த மூன்றாவது மாற்று பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரும் இரண்டாம் கட்ட சீசனுக்கு இந்தச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வெங்கட் கூறுகையில், "சீசன் காலங்களில் கோத்தகிரி சாலையை ஒருவழி பாதையாக மாற்றினாலும், குன்னூர் பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இதை தவிர்க்க உதகைக்கு மூன்றாவது மாற்று பாதையை தமிழக அரசு அமைத்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் சுற்றுலா பயணிகளும் நேர விரையமின்றி பல இடங்களை சுற்றிப்பார்க்க முடியும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வரும் இரண்டாவது சீசனுக்கு முன்னதாகவே இந்த சாலை பணிகளை முடித்தால், சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வந்து செல்வர்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பள்ளத்தில் சிக்கித் தவித்த யானை குட்டி! மீட்டு தாயுடன் சேர்க்கப் போராடிய வனத்துறையினர் - நீலகிரியில் நெகிழ்ச்சி - Baby Elephant Fell Into The Canal

ABOUT THE AUTHOR

...view details