வாஷிங்டன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற நிலையில், நான் போட்டியிருந்தால் அவரை வீழ்த்தியிருக்க முடியும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஒற்றுமைக்காக வேட்பாளர் தேர்வு போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிபர் பதவியில் இருந்து வெளியேறும் ஜோ பைடன், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடாதது குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பைடன், “நான் அப்படி நினைக்கவில்லை. அதிபர் தேர்தலில் நான் போட்டியிருந்தால் ட்ரம்பை தோற்கடித்திருப்பேன், தேர்தலில் கமலா ஹாரீஸ் அவரை வீழ்த்தி விடுவார் என்று நினைத்திரு்தேன்,” என்று பதிலளித்தார்.
“ஆனால், பிரச்னை அதுவல்ல... கட்சியை ஒன்றிணைப்பது முக்கியம் என்று நான் நினைத்தேன், நான் மீண்டும் வெற்றி பெற முடியும் என்று நினைத்தாலும், எனது உடல்நிலை குறித்து கட்சி கவலைப்பட்டபோது, கட்சியை ஒன்றிணைப்பது நல்லது என்று நான் நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.
“அமெரிக்காவின் அதிபராக இருப்பது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை, ஆனால் ஒரு கட்சி தேர்தலில் தோல்வியடையக் காரணமானவராக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தான் நான் விலகி விட்டேன். ஆனால் கமலா ஹாரீஸால் வெல்ல முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன்,” என்று பைடன் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அட்லாண்டாவில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் போட்டியில் இருந்து 82 வயதான பைடன் விலகினார்.
தனது சொந்தக் கட்சித் தலைவர்களிடமிருந்து வந்த பல்வேறு விமர்சனங்களைத் தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து பாதியிலேயே விலக முடிவு செய்து, துணை அதிபராக இருந்த கமலா ஹாரீஸை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஆதரித்தார்.
ஆனால், கமலா ஹாரீஸ் தேர்தலில் ட்ரம்பிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றது. அது வெள்ளை மாளிகையை மீண்டும் கைப்பற்றியது மட்டுமல்லாமல், பிரதிநிதிகள் சபையில் தனது பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் செனட்டிலும் பெரும்பான்மையை அந்த கட்சி பெற்றது.