திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை பெண் காவலர் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் பரிமளா. இவர் நேற்று, திருப்பத்தூரில் நடைபெற்ற காவலர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டு தனது கணவருடன் மாதனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது ஒடுகத்துர் அருகே சென்றுக்கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் ஆட்டோ ஒன்று மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த பரிமளா நிலைத் தடுமாறி சாலையின் நடுவே விழுந்துள்ளார்.
அப்போது, பின்னால் ஒடுகத்தூரிலிருந்து மாதனூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த லாரியின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில், காவலர் பரிமளாவின் கணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்த பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உயிரிழந்த பரிமாளவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"ஓட்டு போடுவதற்காவது வண்டி அனுப்புங்க".. தேர்தல் பிரச்சாரத்தையே அறியாத திருநெல்வேலி காணி பழங்குடியினர்! - LOK SABHA ELECTION 2024