சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கட்சிகள் செய்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக உத்தேச வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இருந்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இன்று டெல்லி செல்லவுள்ளதாக கூறினார்.
அவர்கள் பா.ஜ.க தேசியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து, தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலை எடுத்துரைக்க உள்ளதாகவும், 39 தொகுதிகளிலும் யார் போட்டியிட்டால் நன்றாக இருக்கும், தொண்டர்களின் விருப்பம் என்ன என்ற பட்டியலை அவர்கள் எடுத்துக் கொண்டு செல்வதாகவும் கூறினார்.