மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இரண்டாவது மகள் தீபா (வயது 34). எம்.பி.ஏ பட்டதாரியான இவரும், மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டை குலாம்மைதீன் மகன் இப்ராஹிம் (35) என்பவரும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் 2016ஆம் ஆண்டு இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தீபா இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் தனது பெயரை அத்திபா என்று மாற்றி கொண்டார்.
இப்ராஹிம் - அத்திபா தம்பதிக்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இப்ராஹிம் தனது பெற்றோர் குலாம் மைதீன் - பாத்திமா மற்றும் அண்ணன் அப்துல்லா, அவரது மனைவி ஹாஜிரா உடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்துல்லாவும், இப்ராஹிமும் தற்போது துபாயில் வேலை செய்து வரும் நிலையில், இப்ராஹிம் தான் சம்பாதிக்கும் பணத்தை அண்ணனிடமே கொடுத்து வந்து அண்ணணின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அத்திபா தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தியதால், குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனிக்குடித்தனம் அனுப்ப முடியாது. ஒற்றுமையாக வாழலாம் இல்லையென்றால், பிள்ளைகளை விட்டுவிட்டு நீ மட்டும் வெளியே சென்றுவிடு என்று கணவரின் அண்ணன் மற்றும் குடும்பத்தார் பேசியதாக கூறப்படுகிறது.
கணவன் - மனைவி வாழ்க்கைக்குள் கணவனின் அண்ணன் மற்றும் அவரது மனைவி தலையிடுவதால் மன உளைச்சலுக்கு உள்ளான அத்திபா நேற்று காலை பல்லவராயன்பேட்டை வீட்டில், "இவர்களிடம் என்னால் இருக்க முடியாது. நான் இறந்த பிறகு என் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று செல்போனில் வீடியோ எடுத்து, அதை பெற்றோருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த பிறகு அத்திபாவின் வீட்டிற்கு சென்று பெற்றோர் பார்த்த போது அத்திபா தற்கொலை செய்துள்ளார்.