சென்னை:மாநிலத் தலைவர் பதவியை பெண்ணுக்கு விட்டுக் கொடுப்பீர்களா? என திமுகவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆங்கில புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும் செல்வத்தையும் தர வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன். டெல்லியில் கட்சி தலைவர் நட்டாவை சந்தித்துப் பேச உள்ளேன். தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவரிடம் பேச உள்ளேன். அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்தும் அவரிடம் பேசுவேன்.
பெண்களை லட்சாதிபதி ஆக்குகின்றோம்: தமிழகத்தில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் பெண்கள் முன்னேற்றத்திற்கு தாம் மட்டுமே முழு பொறுப்பு என்பது போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் முன்னேற்றம் படிப்படியாக நிகழ்ந்திருக்கிறது. பெண்கள் விடுதலைக்கு பாரதியார் வித்திட்டார். காமராஜர் பெண்களுக்கு கல்வி கண் கொடுத்தார். பாஜக மேலிடம் வரும் 10 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் புதிய மாநில தலைவர்களை நியமிக்க உள்ளனர். அந்தமான்- நிகோபார் மாநில தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான சிறப்பு அதிகாரியாக நான் செல்கிறேன்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களை லட்சதிபதியாக்கி கொண்டு இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளால் அனைத்து மகளிரும் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிடம் என்று கூறி விட்டு பா.ஜ.க. மறைமுகமாக பிரித்தாளுவதாக சொல்லுகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பெண்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைப்பதாக கூறுகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. மானில தலைவராக நான் பொறுப்பு வகித்திருக்கின்றேன். திமுகவில் பெண் ஒருவரை மாநில தலைவராக நியமிப்பார்களா?