திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், உவரி அடுத்த கரைசுத்து புதூரைச் சேர்ந்த கேபிகே ஜெயக்குமார் தனசிங் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர். இவர் கடந்த 3ஆம் தேதி காணவில்லை என அவரது மகன் உபரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மறுநாள் வீடு அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும், ஜெயக்குமார் எழுதியதாக சில கடிதங்கள் வெளியானது. அதில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, ஜெயக்குமார் அரசியல் பகை அல்லது தொழில் பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல கோணங்களில் நெல்லை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
காங்கிரஸ் தலைகள்: மேலும், கடிதங்களில் இடம்பெற்றிருந்த நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கேவி தங்கபாலு உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக விசாரணை நடந்து வந்தது.
சந்தேகத்தை கிளப்பிய க்ரைம் ஸ்பாட்: ஜெயக்குமார் உடல் கிடந்த இடத்தில் டார்ச் லைட் இருந்தது, அவரது உடல் கை, கால்கள் இரும்பு கம்பிகளால் லேசாக கட்டப்பட்டிருந்தது, வாயில் பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் ஸ்கிரப் இருந்தது என கொலைக்கான அறிகுறிகள் இருப்பதாகவே கருதப்பட்டது.
மேலும், முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், ஏற்கனவே இறந்தவரை எரித்தால்தான் குரல்வளை முழுவதுமாக எரியும் என்றும் நுரையீரலில் திரவங்கள் தாங்காது என்றும் சொல்லப்பட்டது. இதனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்க முகாமந்திரம் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இத்தனை இண்ட்டுகள் கிடைத்தும் போலீசாரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அரசியல் தலையீடு?: மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியானது. அத்துடன், '' இந்த வழக்கை தற்கொலை வழக்காக மற்றும் கோணத்திலேயே போலீசார் விசாரிப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி-க்கு மாற்றியுள்ளது.
அதை தொடர்ந்து நெல்லை மாவட்ட காவல்துறையினர் ஜெயக்குமார் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகளிடம் வழங்கினர். மேலும், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் உலகராணி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆய்வாளர் உலக ராணி இன்று ஜெயக்குமார் சொந்த ஊருக்கு சென்று தனது விசாரணையை தொடங்கி இருக்கிறார். எனவே ஜெயக்குமார் வழக்கில் இரண்டு வாரங்களுக்கு மேல் விலகாமல் இருக்கும் மர்மம் விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஜெயக்குமார் வழக்கை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சி'' - சத்ரிய நாடார் இயக்கம் குற்றச்சாட்டு